உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படுவதால் பிற உயர் கல்வி அமைப்புகள் கலைக்கப்பட உள்ளதாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வழியே பேசிய அமித் கரே, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில் மத்திய கல்வி அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அடுத்த கல்வியாண்டில் தேசிய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்பட உள்ளதாகவும், இது நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி அமைப்புகளையும் நிர்வகிக்கும் என்றும் குறிப்பிட்டார். எனவே, AICTE, UGC உள்ளிட்ட தனித்தனி உயர்கல்வி அமைப்புகள் கலைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 50,000 மேற்பட்ட கல்லூரிகளை தேசிய உயர்கல்வி ஆணையமே நிர்வகிக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். அதே போல மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக ஒரே ஒரு நுழைவு தேர்வு மட்டும் நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனிமேல், மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு, அவர்கள் முன்வைக்கும் செயல்திட்டத்தின் அடிப்படையில், ஆராய்ச்சிக்கான நிதி வழங்கப்படும் என்றும் அமித் கரே தெரிவித்தார்.







