வீரியமிக்க புதிய வடிவ கொரோனா வைரஸ் பரவும் நிலையில் லண்டனில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்துள்ள 11 பேர் தனிமை படுத்தப்பட்டு சுகாதார துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இங்கிலாந்தில் இருந்து கடந்த 10 நாட்களுக்குள் தமிழகம் வந்துள்ள பயணிகளை தீவிரமாக சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஆரோவில், மரக்காணம், வானூர், காணை ஆகிய பகுதிகளை சேர்ந்த 11 பேர் லண்டனில் இருந்து சில தினங்களுக்கு முன் சென்னை வந்துள்ளனர். அவர்கள் 11 பேருக்கும் லண்டனில் புறப்படுவதற்கு முன்பாகவும், சென்னை வந்திறங்கிய பின்பும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
எனினும் அவர்களுக்கு மீண்டும் இன்று கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதையடுத்து அவர்கள் 11 பேரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 11 பேரையும் விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறையினர், 14 நாட்கள் வீட்டிலேயே தனிமையில் இருக்கும்படி வலியுறுத்தி உள்ளனர். அவர்களுக்கு சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
மேலும் 11 பேருடன் தொடர்பில் உள்ளவர்களையும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் உரிய சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







