கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவை தொடர்ந்து கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே பிரிட்டனில் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சாதாரண கொரோனாவை விட 70% பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில் இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது கர்நாடக அரசும் இரவு நேர ஊரடங்கிற்குள் நுழைந்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக புதிய வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. அதன்படி இன்று முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கை பொதுமக்கள் அனைவரும் தவராமல் கடைபிடிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.







