இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை தெரிவிக்கும் விதமாக யுவராஜ் சிங் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஆசைகளை நிறைவேற்றுவதற்கு பிறந்தநாள் ஒரு வாய்ப்பாக அமையும். இந்த ஆண்டு எனது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு பதிலாக ஒரு வேண்டுதலை வைக்கிறேன்’ என கூறியுள்ளார்.
போராட்டம் தொடர்பாக அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை வெற்றி பெற்று சுமூகமான முடிவு கிடைக்க வேண்டும் என்பதே தமது பிறந்தநாள் வேண்டுதல் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக தமது தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்த கருத்து தமக்கு வருத்தம் அளிப்பதாகவும், அது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் கூறி உள்ளார். அதேபோல் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.







