சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை பல்லாவரத்தில் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக சிறந்து விளங்குவதாக கூறினார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சிக் கட்டிலில் மீண்டும் அமர்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரி குளங்களை சீர் செய்ததால் மழை வெள்ள சேதம் இல்லாமல் காப்பாற்றப்பட்டதாக விளக்கமளித்துள்ளார். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் 7,700 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.







