ஆவணங்களை ஒப்படைக்காததால் அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் விசாரித்து வருகிறார்.சூரப்பா பதவியேற்றது முதல் தற்போது வரையிலான பணப்பரிவர்த்தனைகள், பணி நியமனங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தேர்வு நடைமுறைகள் போன்றவற்றுக்கான ஆவணங்களை ஒப்படைக்கக் கோரி பதிவாளர் கருணாமூர்த்திக்கு விசாரணை அதிகாரி கலையரசன் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், ஆவணங்களை ஒப்படைக்க கோரி விசாரணை அதிகாரி சம்மன் அனுப்பிய நிலையில், நேரில் ஆஜரான பதிவாளர் பல்வேறு ஆவணங்களை ஒப்படைத்தார்.ஆனால் தேர்வு முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்களை இதுவரை ஒப்படைக்காமல் அண்ணா பல்கலைக்கழகம் காலதாமதம் செய்து வருவதால், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசனுக்கு, விசாரணை அதிகாரி கலையரசன் சம்மன் அனுப்பி உள்ளார்.
தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அப்போது உரிய ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் விசாரணை அதிகாரி கலையரசன் உத்தரவிட்டுள்ளார்.







