அடிலைட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை விட இந்திய அணி 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட், போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டை இழந்து 233 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, கூடுதலாக 11 ரன்கள் மட்டுமே எடுத்து, மீதமிருந்த நான்கு விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 244 ரன்களை எடுத்தது. விராட் கோலி அதிகபட்சமாக 74 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடியது. அஸ்வின் பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணியின் இளம்வீரர் கேமரூன் கிரீன் அடித்த பந்தை, விராட் கோலி அபராமாக கேட்ச் பிடித்தது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்திய அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்கில் 191 ரன்களில் சுருண்டது. தமிழகத்தைச் சேர்ந்த வீரர் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி, 4 விக்கெட்டுக்களையும், உமேஸ் யாதவ் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.







