கடல் சீற்றம் மிகுந்த அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடி தடைகாலமாக மாற்றி அறிவிக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள், மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை – திருவள்ளூர் – காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடிப்பு கில்நெட் மற்றும் லாங்லைன் டூனா விசைப்படகு உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஆர்.வரதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்ற தாக்கல் செய்தார். அதில் உலகில் அதிக புயல் பாதிப்புக்குள்ளாகும் 6 முக்கிய இடங்களில் வங்காள விரிகுடாவும் உள்ளது. இதில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் புயல்கள் அதிக அளவில் வீசுகின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டங்களில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
எனவே ஏப்ரல் 15 முதல் ஜுன் 15 வரை என்ற மீன்பிடி தடைக்காலம் தொடர்பான உத்தரவை ரத்து செய்துவிட்டு, வங்கக்கடல் சீற்றம் மிகுந்து காணப்படும் அக்டோபர் 15முதல் டிசம்பர் 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடித் தடைகாலமாக அறிவிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகளின் மீன்வளத்துறை, இந்திய மீன்வள ஆய்வுத்துறை, மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு மீனவர் நல வாரியம், மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவை 6 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.







