ZOHO நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தன்னையும், தன் மகனையும் கைவிட்டதாக அவரது மனைவி புகார் அளித்துள்ள நிலையில், அந்தப் புகாருக்கு ஸ்ரீதர் வேம்பு மறுத்துள்ளார்.
ZOHO நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு. அமெரிக்காவில் சோஹோ நிறுவனத்தை நடத்தி வரும் இவர் சான்பிரான்சிஸ்கோவில் தனது மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசனுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டில் வசித்து வருகிறார். தற்போது தென்காசி அருகே மத்தளம்பாறை என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், ஸ்ரீதர் வேம்புவின் மீது அவரின் மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து பிரபல ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், என் கணவருடன் நான் 29 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தேன். என் மகனுக்கு உடல்ரீதியாக சில பிரச்னைகள் உள்ளன. ஆனால் ஸ்ரீதர் எங்களை கவனிக்கவில்லை. அவர் இப்போது என்னை கைவிட்டுவிட்டார் என்று கூறியுள்ளார். இது குறித்து நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், எங்களுக்கு பொதுவாக இருந்த சில சொத்துக்களையும், சில பங்குகளையும் ஸ்ரீதர் வேம்பு தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றிவிட்டார். இதற்கான தொகையை கொடுக்காமல் அவர் சொத்துக்களை மாற்றி உள்ளார். என்னிடம் கூறாமல் முறையின்றி பங்குகளை மாற்றி உள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார். கலிபோர்னியாவில் மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கணவர் சொத்துக்களை விற்க முடியாது என்று சட்டம் உள்ள நிலையில், ஸ்ரீதர் வேம்பு தனது உறவினர் பெயர்களில் சொத்துக்களை மாற்றியது சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து போர்ப்ஸ் இதழுக்கு ஸ்ரீதர் வேம்பு பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் யாருக்கும் எந்தப் பங்குகளையும் மாற்றவில்லை, என் நிறுவனங்களில் என்னுடைய நிதி ஆதாரம் எப்போதும் குறைந்ததில்லை. கிராமப்புற மேம்பாட்டுக்காகவும், வளர்ச்சிக்காகவும் நான் இந்தியாவுக்குச் சென்றேன். மற்றபடி இதில் வேறு எந்த காரணமும் இல்லை. நான் பிரமிளாவை தமிழ்நாட்டுக்கு அழைத்தேன். ஆனால் அவர் வரவில்லை. அதனால், என் மகனும் அங்கே இருக்கிறார். நான் மனைவி, மகனைக் கைவிடவில்லை. அவர்களுக்குப் பணரீதியாக உதவிகள் செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா