கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.
இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து இணையவாசிகள் பலரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் பலர் அவருக்கு எதிராக போஸ்டர்களையும் ஒட்டினர். தொடர்ந்து, சிலர் அவரின் வீட்டின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு CRPF பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, Y பிரிவில் இருந்து Y+ அல்லது அதற்கு மேலான Z பிரிவு பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என சிஆர்பிஎஃப் தரப்பிலிருந்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.








