பிரபல நடிகர் மீது யூ-டியூபர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரால் பரபரப்பு… குண்டர்களுடன் வீடு புகுந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு… என்ன நடந்தது…? புகார் அளித்த யூ-டியூபர் யார்…? செய்தித் தொகுப்பில் காணலாம்…
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் நடிகராகவும் நடித்து புகழ் பெற்றவர் பாலா. தமிழில் வீரம், தம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். பிரபல திரைப்பட இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரான இவர், சில மாதங்களுக்கு முன் கல்லீரல் தொற்றால் பாதிக்கப்பட்டார். அதற்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு அங்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் நடிகர் பாலா திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பாலா மீது ஆகஸ்டு 4 ஆம் தேதி த்ரிக்கக்கர காவல் நிலையத்தில் யூ-டியூபர் ஒருவர் சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செகுத்தான் என்ற யூ-டியூப் சேனலை நடத்தி வரும் அஜு அலெக்ஸின் சார்பில் அவரது நண்பர் அப்துல் காதர் என்பவர் இந்த புகாரை அளித்தார். அந்த புகாரில் நடிகர் பாலா மற்றும் இரு குண்டர்கள் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக அஜு தெரிவித்திருந்தார். தான் வீட்டில் இல்லாத அந்த சமயத்தில், நண்பர் அப்துல் காதர் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும், உள்ளே வந்த நடிகர் பாலா தனது நண்பர் அப்துல் காதரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டுச் சென்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்துமீறி நுழைந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டல் விடுத்த நடிகர் பாலா உள்ளிட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் புகார் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். யூ-டியூபர் அஜு அலெக்ஸின் யூ-டியூப் சேனல், அரசியல் மற்றும் சினிமா நடப்புகள் தொடர்பாக நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக தெரிகிறது.
அப்படி ஒரு நிகழ்ச்சியில் நடிகர் பாலா குறித்து அந்த சேனலில் விமர்சனம் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் கடுப்பான நடிகர் பாலா அந்த கோவத்தில் தனது வீட்டிற்கு வந்து, வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றதாக அஜு அலெக்ஸ் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நடிகர் பாலா முற்றிலுமாக மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் புகார் தொடர்பாக நடிகர் பாலா மீது த்ரிக்கக்கர போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் நடிகர் பாலாவை நேரில் விசாரிக்க, அவரை காவல் நிலையத்தில் ஆஜராகுமாறும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பிரபல நடிகர் மீது யூ-டியூபர் கொலை மிரட்டல் புகார் அளித்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









