மக்களவையில் நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
மோடி சமூகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரது எம்பி பதவி தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. இதனால், நான்கு மாதங்களுக்கு பின்னர் நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அவரை காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வரவேற்று முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்ததை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் எம்பிக்கள் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்டோருக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். முன்னதாக ராகுல்காந்தி தமது டுவிட்டர் பக்கத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்பி என்பதை நீக்கி விட்டு நாடாளுமன்ற உறுப்பினர் என மாற்றம் செய்துள்ளார். இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக
மக்களவையில் நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் உள்ள திமுக எம்.பி.க்கள் அலுவலகத்திற்கு சென்ற ராகுல் காந்தியும், சோனியா காந்தியும், கருணாநிதியின் நினைவு நாளையொட்டி அவரது உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது திமுக எம்பிக்கள் உடன் இருந்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









