இளைஞர் விக்னேஷ் மரண வழக்கு-காவல் துறையினர் 6 பேருக்கு ஜாமீன்

காவல்துறை விசாரணையில் இளைஞர் விக்னேஷ் மரணமடைந்த வழக்கில் 90 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், இந்த வழக்கில் கைதான காவல்துறையினர் 6 பேருக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்…

காவல்துறை விசாரணையில் இளைஞர் விக்னேஷ் மரணமடைந்த வழக்கில் 90 நாட்கள்
கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், இந்த வழக்கில் கைதான
காவல்துறையினர் 6 பேருக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷை கடந்த ஏப்ரல் 18ம் தேதி தலைமைச்
செயலக காலனி காவல் நிலையத்தினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில், மறுநாள் மர்மமான முறையில் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்த சந்தேக மரணம் என்ற வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு
செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், தலைமை செயலக காலனி சிறப்பு உதவி ஆய்வாளர்கள்
குமார், முனாப், காவலர் பவுன்ராஜ், ஆயுதப்படை காவலர்கள் ஜெகஜீவன்,
சந்திரகுமார் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோரை கைது செய்து சிறையில்
அடைத்தனர்.

இவ்வழக்கில் ஆறு பேரும் ஜாமீன் கேட்டு ஏற்கனவே இரண்டு முறை தாக்கல்
செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் 7 மற்றும்
ஆகஸ்ட் 2ஆம் தேதிகளில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் 6 பேரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்
மூன்றாவது முறையாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, மே 7ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், 90 நாட்களை கடந்தும், காவல்துறை விசாரணையை முடித்து குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யாததால்,
தங்களுக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி, 6 பேருக்கும் சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.