சஞ்சய் ராவத்துக்கு வரும் 22ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராவத்தை வரும் 22ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவ சேனா மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய்…

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராவத்தை வரும் 22ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவ சேனா மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத், ஆயிரத்து 34 கோடி ரூபாய் மதிப்பிலான பத்ரா சால் நில மோசடி யில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக கடந்த ஜூலை 31ம் தேதி மும்பையில் உள்ள சஞ்சய் ராவத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இதைத் தொடர்ந்து அவர் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மறுநாள் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சஞ்சய் ராவத் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப்டடார். பின்னர் அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரித்தது.

சஞ்சய் ராவத் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 2 வாரங்களுக்கு அதாவது வரும் 22ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே உத்தரவிட்டார்.

அப்போது, வீட்டில் இருந்து உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக தான் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், பொய்யான குற்றச்சாட்டு மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது சிவ சேனா மற்றும் மகாராஷ்ட்ராவை பலவீனப்படுத்தும் முயற்சி என்றும் குற்றம் சாட்டினார்.

இதுபோன்ற அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் தான் அடிபணிய மாட்டேன் என தெரிவித்த சஞ்சய் ராவத், சிவ சேனாவை விட்டு வெளியேற மாட்டேன் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.