பீகாரில் “அபாய” கட்டத்தில் நிதிஷ் – பாஜக கூட்டணி?

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஏன் இந்த மோதல் போக்கு? எங்கே உருவானது முரண்பாடு? நிதிஷ் குமார் முன்னுள்ள வாய்ப்புகள் ? என்ன…

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஏன் இந்த மோதல் போக்கு? எங்கே உருவானது முரண்பாடு? நிதிஷ் குமார் முன்னுள்ள வாய்ப்புகள் ? என்ன என்பது பற்றி பார்ப்போம்…

எங்கே தொடங்கியது குழப்பம்?

மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்து ஆர்.சி.பி. சிங்கின் மாநிலங்களவை பதவிக்காலம் முடிவுக்கு வந்த நேரத்தில், அதை நீட்டிக்க மறுத்துவிட்டார் பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார். அவருக்கு பதிலாக பாஜகவிடம் இரண்டு பேருக்கு மத்திய அமைச்சர் பதவிகளை நிதிஷ் கோரியதாகவும், அதற்கு பாஜக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் இருந்தே இரண்டு கட்சிகளுக்கும் முரண்பாடு வெளிப்படத் தொடங்கி, பகிரங்கமாக இரு கட்சியினரும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். அதுவும், நிதிஷ் குமாரின் எதிர்காலத் திட்டமும் கூட்டணி முறியும் நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது.

பீகார் சட்டமன்றத்தில் யாருக்கு பலம்?

கொரோனா உச்சத்தில் இருந்த போது, பீகாரில் 2020ல் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனாநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டது. ஆனால் தேர்தல் முடிவோ பாஜகவுக்கு பெருமகிழ்ச்சியையும், முதல்வராக இருந்த நிதிஷ் குமாருக்கு சோகத்தையும் அளித்தது. அந்த கூட்டணி 127 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தாலும், நிதிஷ் குமாரின் கட்சி 43 இடங்களில் மட்டுமே வென்றது. 28 இடங்களில் தோல்வியைத் தழுவியது. பாஜகவோ கடந்த தேர்தலை விட 21 இடங்களில் கூடுதலாக வென்று 74 இடங்களைக் கைப்பற்றி இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக மாறியது. அதேபோல் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி 115 இடங்களில் வென்றது. 80 இடங்களில் வென்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி மாற்றங்களுக்கு வித்திடாமல், பாஜகவோ, நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்து, கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது.

பாஜகவுடன் மோதும் நிதிஷ்?

மத்திய அமைச்சர் பதவி விவகாரத்தில் பாஜகவுடன் நிதிஷ் மோதுவதாக கூறப்பட்டாலும், 2014ல் நரேந்திர மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் தான். இதன் காரணமாக 2015ல் லாலுவுடன் கூட்டணி அமைத்து பீகாரில் ஆட்சியைப் பிடித்தார். கூட்டணி சமூகமாக நீடித்து வந்த நேரத்தில், மோடியை கடுமையாக விமர்சித்த நிதிஷ், திடீரென 2017ல் பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வித்திட்டார். பாஜகவுடனே கூட்டணி வைத்து, லாலு கட்சியுடனான கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் இப்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பாஜகவின் கட்டுப்பாட்டில் போய்விடுமோ என்ற அச்சமும் நிதிஷுக்கு பற்றிக் கொண்டுள்ளது. மேலும் வரும் சட்டதேர்தலில் 200க்கு மேற்பட்ட இடங்களிலும், மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களிலும் பாஜக போட்டியிடத் திட்டமிட்டு வருவதாக பேசப்படுவதும் கூட நிதிஷுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய அமைச்சராக இருந்த ஆர்.சி.பி. சிங்கை தன்வசமாக்கியதைப் போலவும், பீகாரிலும் ஏக்நாத் ஷிண்டேவை உருவாக்கி தங்கள் கட்சியையும் கபளீகரம் செய்துவிடுமோ பாஜக என்ற அச்சமும் நிதிஷுக்கு எழுந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். இதன் காரணமாக மத்தியில் அசுர பலத்துடன் இருக்கும் பாஜகவுடன் நிதிஷ் மோதலுக்கு தயாராகவிட்டதாகவே அவர்கள் சொல்கிறார்கள்.

பிரதமருடனான சந்திப்பை தவிர்த்த நிதிஷ்

இந்த நேரத்தில் தான் டெல்லியில் மத்திய அரசால் அழைக்கப்பட்ட கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தொடர்ந்து தவிர்த்து வந்தார். கடந்த ஜூலை மாதம் குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்ற நிகழ்வுக்கு முறையாக அழைக்கப்பட்டபோதிலும் அவர் பங்கேற்கவில்லை. ஜூலை 17 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர்கள் கூட்டத்தையும் அவர் தவிர்த்துவிட்டார். அத்தோடு குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் அளித்த பிரவு உபச்சார விருந்து நிகழ்ச்சி, நிதி ஆயோக் கூட்டம் என பலவற்றை தவிர்த்து வந்தார் நிதிஷ். இதற்குக் காரணம், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடனான சந்திப்புகளைத் தவிர்ப்பதே. அத்துடன் பீகாரில் சபாநாயகராக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த விஜய் குமார் சின்ஹா, நிதிஷ் குமார் அரசு மீது முன்வைத்த விமர்சனம் மேலும் சிக்கலை உருவாக்கியது.

அடுத்து என்ன நடக்கும்?

பீகாரில் ஆளும் பாஜக – ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பீகார் முதலமைச்சரும் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நாளை கூட்டியுள்ளார். பாட்னாவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. அதேபோல் பீகார் மாநில காங்கிரஸ் கட்சியினரும் இன்று மாலை கூடி ஆலோசனை நடத்துகின்றனர்.

யாருக்கு அடுத்து வாய்ப்பு?

நிதிஷ் குமார் அடுத்து என்ன முடிவு எடுக்கலாம்? அவருக்கு முன்னுள்ள வாய்ப்புகள் என்ன என்று பார்ப்போம்…
• பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, தமது நீண்டகால நண்பரும் தற்போது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் லாலு பிரசாத் கட்சியுடனான கூட்டணியை துளிர்க்கலாம்.
• முதலமைச்சர் பதவியுடன் கூட்டணி என்ற அடிப்படை நிபந்தனையுடன் இந்த புதிய கூட்டணியை உருவாக்கலாம். லாலு கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவிகளை வழங்கலாம்.
• பாஜகவுக்கு அச்சமூட்டி சமரசத்திற்கு கொண்டு வரலாம். அதன் மூலம் மத்திய அரசில் அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும், 2024 மக்களவைத் தேர்தலில் கௌரவமான எண்ணிக்கையைப் பெற்று பாஜக கூட்டணியில் போட்டியிட முனையலாம். அல்லது 2025 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு இணையான இடங்களையோ, கூடுதல் இடங்களையோ கோர முயற்சிக்கலாம்.

அண்மைக்காலமாக பாஜகவுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்துவரும் நிதிஷ் குமார், நாளை அதிரடி முடிவை எடுக்கக் கூடும் என்றும் இந்த கூட்டணி முறியும் நிலைக்கு வந்துவிட்டதாகவும் பீகார் மாநிலத்தை ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியினர் பேசத் தொடங்கிவிட்டனர்.
– ஜெயகார்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.