இளைஞரை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த கொடூரர்கள், வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதால் மனமுடைந்த இளைஞர் உயிரிழப்பு க்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இளைஞர் ஒருவரை கண்ணைக்கட்டி மரத்தில் நிற்க வைத்து கட்டையால் அடிக்கும் வீடியோ காட்சி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில், தாக்குதல் நடத்தும் கும்பல், இனிமேல் பணத்தை எடுப்பாயா என கேட்டுக்கொண்டே அடிப்பதும், வலி தாங்க முடியாத அந்த நபர் எடுக்க மாட்டேன், என்னை விட்டு விடுங்கள் என கதறியதும் காண்போரின் கண்களை குளமாக்கியது.
இதற்கிடையே, தஞ்சை மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் விஷம் அருந்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், அவர் பாபநாசம் தாலுகா பூண்டி மேலத் தெருவை சேர்ந்த ராகுல் என்பதும், சமீபத்தில் வைரலான வீடியோவில், அடி வாங்கிய இளைஞர் அவர் தான் என்பதும் தெரியவந்தது.
ராகுலிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. இவர் அந்த பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரனிடம் மணல் அள்ளும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். ராகுல் தனக்கு வரவேண்டிய சம்பளம் பாக்கியை விக்னேஸ்வரனிடம் கேட்டிருக்கிறார்.
அப்போது, சம்பளம் தர மறுத்த விக்னேஸ்வரன், தனக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறியதாகவும், தகாத வார்த்தையால் திட்டியதாகவும் ராகுல் கூறினார். மேலும், கண்ணைக்கட்டி காரில் அழைத்துச் சென்று தோப்பில் வைத்து கட்டையால் துடிக்கத் துடிக்க கொடூரமாக அடித்ததாகவும் வேதனையுடன் தெரிவித்தார் ராகுல். வீடியோ வைரலாக பரவியதால், உயிரிழப்பு செய்ய முயன்றதாகவும் ராகுல் கூறினார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் ராகுலின் தந்தை புகாரளித்தார்.
முக்கிய குற்றவாளியாக கருதப்படும் விக்னேஸ்வரன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, விக்னேஸ்வரன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, முதலில் நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுத்ததாகவும், விரைந்து குற்றவாளியை கைது செய்திருந்தால் ராகுல் உயிரிழப்பு க்கு முயன்றிருக்க மாட்டார் என்றும் அப்பகுதி மக்கள் கூறினர்.







