புதுச்சேரியில் காரில் வேகமாக சென்று விபத்து ஏற்படுத்திவிட்டு சென்றவரை
துரத்தி பிடித்த பெண் போக்குவரத்து காவலரை கடத்த முயன்ற வழக்கில் தமிழகத்தை
சேர்ந்த இளைஞரை போலிசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து
வருபவர் பெண் ஊர்க்காவல் படைவீரர் ஜீவிதா. இவர் கடந்த 19 ம் தேதி காலை
கடலூர் சாலை தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் உள்ள சிக்னலில் பணி செய்து
வந்த போது கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ஒரு கார் நான்குமுனை
சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது.
ஊர்க்காவல் படைவீரர் ஜீவிதா அங்கிருந்தவர்கள் உதவியுடன் காரை விரட்டி சென்று
மடக்கி பிடித்தார், பின்னர் காரை ஓட்டிச்சென்ற டிரைவரை விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது குறித்து கேட்டு காரை கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு எடுத்து வர சொல்லி காரில் அமர்ந்து கொண்டு சென்றுள்ளார், கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையம் அருகே வந்த போது அந்த வாகன ஒட்டி நிறுத்தாமல் வேகமாக கடலூரை நோக்கி சென்றதால் தன்னை கடத்த முயல்வதை அறிந்த ஜீவிதா காரை நிறுத்த கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் ஜீவிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

காயமடைந்த பெண் காவலரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர் .சிசிடிவி கேமிராவில் பதிவான காரின் என்னை கொண்டு விசாரணை மேற்கொண்டதில், அவர் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் ஷாஜி என்று கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற புதுச்சேரி போலிசார் அவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.







