முக்கியச் செய்திகள் தமிழகம்

“படிப்பதற்கு தகுதி தேவையில்லை, படித்தால் தானாக தகுதிவந்துவிடும்…” – முதலமைச்சர்

படிப்பதற்கு தகுதி தேவையில்லை. படித்தால் தானாக தகுதிவந்துவிடும்… என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூரில் நீட் தேர்வு எழுதிவிட்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வு தொடர்பாக மேட்டூரை சேர்ந்த மாணவன் ஒருவர், மற்றும் அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் என இருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மூன்றாவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், படிப்பதற்கு தகுதி தேவையில்லை. படித்தால் தானாக தகுதிவந்துவிடும்… என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும்,

“எல்லோருக்கும் வணக்கம், கடந்த 2017ஆம் ஆண்டு மாணவி அனிதா உயிரிழந்தபோது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில்தான் நான் தற்போதும் இருக்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சேலத்தில் தனுஷ் என்ற மாணவன் உயிரிழந்தபோதே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தேன். இந்தநிலையில், நேற்று அரியலூர் மாவட்டத்தில் கனிமொழி என்ற மாணவியும், வேலூர் மாவட்டத்தில் சவுந்தர்யா என்ற மாணவியும் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் செய்தியைக் கேட்டு நான் சுக்குநூறாக நொறுங்கிவிட்டேன். இப்படி ஒரு துயரம் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்ற அக்கறைதான் தற்போது உள்ளது. பல தலைமுறைகளாக மறுக்கப்பட்டிருந்த கல்விக் கதவு தற்போதுதான் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மூடுவதற்குதான் நீட் தேர்வு வந்துள்ளது. படிப்பதற்கு தகுதி தேவையில்லை. படித்தால் தானாக தகுதிவந்துவிடும். நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. மருத்துவம் படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவை சிதைக்கதான் இந்த நீட் தேர்வு உள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க இரங்கிவராமல் மத்திய அரசு கல்மனதுடன் உள்ளது. ஏ.கே.ராஜன் குழுவில் லட்சக்கணக்கானவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு வேண்டாம் என்று ஆணையம் அறிக்கைகொடுத்தது. அந்த ஆணையம் கொடுத்த அறிக்கையை அடிப்படையாக வைத்து நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக இதனை நிறைவேற்றினோம். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலையே மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தை பல்வேறு மாநில அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லவிருக்கிறோம். நீட் தேர்வு இல்லாத சூழலை உருவாக்குவோம். நீட் தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை என்று உயிரை மாய்த்துக்கொள்ளும் செய்தி வேதனை அளிக்கிறது. உங்களால் முடியாதது எதுவும் இல்லை என்ற தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும். நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்காக 104 என்ற தொலைபேசி என்று உருவாக்கியுள்ளோம்.

மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். பெற்றோர்களும் குழந்தைகளுக்கு அளவுக்கு மீறி அழுத்தம் தர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

நாய்கள் விஷம் வைத்து கொலை – அடுத்தடுத்து அரங்கேறும் கொடூர சம்பவங்கள்.!

Vandhana

ஆக்சிஜன் சிலிண்டர் வெடிப்பு : 82 பேர் உயிரிழப்பு!

Ezhilarasan

சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு! – தமிழக அரசு அரசாணை

Nandhakumar