“பாறையில் அமர்ந்து தியானம் செய்தால் விவேகானந்தர் ஆகி விட முடியாது” – திருமாவளவன் பேச்சு

விவேகானந்தர் போல் பாறையில் அமர்ந்து தியானம் செய்தால் விவேகானந்தர் ஆகிவிட முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.  இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று…

விவேகானந்தர் போல் பாறையில் அமர்ந்து தியானம் செய்தால் விவேகானந்தர் ஆகிவிட முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். 

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102 தொகுதிகள்) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88 தொகுதிகள்) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93 தொகுதிகள்), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96 தொகுதிகள்), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49 தொகுதிகள்), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58 தொகுதிகள்) நடைபெற்றது.  7-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (57 தொகுதிகள்) நடைபெறுகிறது.  தேர்தலில் நாடு முழுவதும் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே சென்னை பெசன்ட்நகர் ராஜாஜி அரங்கத்தில் மூத்த விஞ்ஞானி பத்மாவதி எழுதிய ‘வியப்பூட்டும் பஞ்சபூதங்களும் உயிரூட்டும் நீர் நிலைகளும்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

“10 ஆண்டு காலம் இருளில் மூழ்கிய இந்திய தேசம் வெளிச்சத்திற்கு வரப்போகிறது.
விடியல் பிறக்கப் போகிறது.  ஜனநாயகம் பாதுகாக்கப்பட மக்கள் தீர்ப்பு எழுதி இருக்கிறார்கள்.  தீர்ப்பு வெளியாகும் நாள் தான் ஜூன் 4.  பிரதமர் மோடி கன்னியாகுமரியில் விவேகானந்தர் அமர்ந்த பாறையில் அமர்ந்து தியானம் செய்கிறார்.

 

விவேகானந்தர் போல் பாறையில் அமர்ந்து தியானம் செய்தால் விவேகானந்தர் ஆகிவிட முடியாது.   விவேகானந்தரைப் போல நன்மதிப்பை பெற முடியாது.  புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.   கடந்த முறை அவர் இமாச்சல் பிரதேசத்திற்கு சென்று அங்கு ஒரு குகையில் அமர்ந்து தியானம் செய்தார்.

இந்த முறை விவேகானந்தர் அமர்ந்த பாறையில் தியானம் செய்கிறார்.  பிரதமர் நரேந்திர மோடி தியானம் மேற்கொள்வது தேர்தலுக்கான யுத்தி.  மேற்குவங்கத்தில் உள்ள மக்கள் இந்த வலைக்குள் விழுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்.  வழக்கம்போல தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும்.  தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஒரு சார்பாக இயங்குகிற ஒரு தோற்றம் உருவாகி இருக்கிறது.”

இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.