வெற்றி பெறுவாரா யஷ்வந்த் சின்ஹா?

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வெற்றி பெறுவாரா என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகள் வலுவிழுந்துள்ள காலம் இது. ஒரு காலத்தில் மத்தியிலும்…

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வெற்றி பெறுவாரா என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகள் வலுவிழுந்துள்ள காலம் இது. ஒரு காலத்தில் மத்தியிலும் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தேசிய அரசியலில் தனக்கு இருந்த செல்வாக்கை இழந்து நிற்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்ததாக தேசிய அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வளர்ந்து நிற்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே.

காங்கிரஸ், பாஜக தவிர்த்து 6 கட்சிகள் தேசிய கட்சிகளுக்கான தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள போதிலும் அவை தேசிய அளவில் கட்டமைப்பைக் கொண்ட கட்சிகள் அல்ல. இதன் காரணமாக அந்த கட்சிகளால் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடிவதில்லை.

அதேநேரத்தில் இந்தியா எதிர்க்கட்சிகள் இல்லாத நாடு அல்ல.

தேசிய அளவில் இல்லாவிட்டாலும் மாநில அளவில் பாஜகவை எதிர்க்கும் வலிமையை பல்வேறு கட்சிகள் கொண்டுள்ளன.

அத்தகைய கட்சிகளில் 13 கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர்தான் யஷ்வந்த் சின்ஹா.

இவற்றில், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் மாநில ஆளும் கட்சிகளாகவும், பிரதான எதிர்க்கட்சிகளாகவும் திகழ்பவை.

இந்த 13 கட்சிகள் அல்லாது ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்ட்ர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், ஷிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

இவற்றில் ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்ட்ர சமிதி உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவு யஷ்வந்த் சின்ஹாவுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. எனினும், இந்த கட்சிகளின் ஆதரவால் மட்டும் யஷ்வந்த் சின்ஹா வெற்றி பெற்றுவிட முடியாது.

இதை கருத்தில் கொண்டே, யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க பாஜக முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஏனெனில், யஷ்வந்த் சின்ஹாவின் பெயர் அறிவிக்கப்படும் வரை, பாஜக தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.

எனினும் எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை கண்டுகொள்ளாத பாஜக, தங்கள் கட்சியைச் சேர்ந்தவரும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான திரெளபதி முர்முவை வேட்பாளராக அறிவித்துள்ளது.

ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியின பெண் வேட்பாளர் என்பதால், ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணியைத் தாண்டி, பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஷிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவும் திரெளபதி முர்முவுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே, வெற்றிக்கான வாய்ப்பை அதிகம் கொண்டிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, திரெளபதி முர்முவை அறிவித்திருப்பதன் மூலம், வெற்றியை உறுதி செய்யும் என்றே கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.