குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநரான திரௌபதி முர்முவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை 18ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹாவை எதிர்கட்சிகள் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து அறிவித்தன.
பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர்
இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் குடியரசு வேட்பாளரை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநரான திரௌபதி முர்முவை குடியரசு தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக இருந்தவர். இந்த குடியரசு தலைவர் தேர்தலில் இவர் வெற்றி பெற்றால் நாட்டில் முதல் பழங்குடியின குடியரசு தலைவைர் என்ற பெருமையை பெறுவார்.
திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு 20 ஜூன் 1958 அன்று ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைடாபோசி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் பிரஞ்சி நாராயண் துடு. பழங்குடி இனத்தைச் சேர்ந்த சந்தால் குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.
அரசியல் ஈடுபாடு
ஒடிசாவில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிஜு ஜனதா தளம் கூட்டணி அரசு 2006ம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது இவர் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராகவும் பின்னர் மீன்வளம் மற்றும் விலங்கு வளங்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தார். மேலும் 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ராய்ரங்பூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








