இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகளின் பட்டியலை, யாகூ தேடு பொறி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் தங்கள் தேடுபொறி மூலம் அதிகம் தேடப்பட்ட சினிமா பிரபலங் களின் பட்டியலை, யாகூ (Yahoo) வெளியிடுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர்களில் கடந்த செப்டம்பர் மாதம் மாரடைப்பால் மரணமடைந்த சித்தார்த் சுக்லா, அதிகம் தேடப்பட்ட நடிகராக முதலிடத்தில் இருக்கிறார்.
இவரை அடுத்து இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான் இரண்டாம் இடத்திலும் பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நான்காவது இடத்தில் சமீபத்தில் மரணமடைந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரும் இந்தி நடிகர் திலீப் குமாரும் உள்ளனர். போதை மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.
நடிகைகளில், இந்தி நடிகை கரீனா கபூர் கான் அதிகம் தேடப்பட்ட நடிகையாக முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் கேத்ரினா கைஃபும் பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், தீபிகா படுகோன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு காதல் கணவரை பிரிவதாக அறிவித்த நடிகை சமந்தா, 10 வது இடத்தில் இருக்கிறார்.









