எழுத்தாளர் கி.ரா நினைவரங்கம், டிஜிட்டல் நூலகம் – சிறப்பம்சங்கள் என்னென்ன?

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணனை கவுரவித்துப் போற்றும் வகையில் கோவில்பட்டியில் அவருக்கு நினைவரங்கம், டிஜிட்டல் நூலகம், முழு உருவ வெண்கலச் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து…

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணனை கவுரவித்துப் போற்றும் வகையில் கோவில்பட்டியில் அவருக்கு நினைவரங்கம், டிஜிட்டல் நூலகம், முழு உருவ வெண்கலச் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மண்வாசனையை படைப்புகளில் பிரதிபலிக்கச் செய்த தமிழக எழுத்தாளர்களில் தனித்துவமானவர் கி.ராஜநாராயணன். கரிசல் இலக்கியத்தின் முன்னோடியான அவர், பள்ளிப்பருவ கல்வியை மட்டுமே முடித்திருந்தாலும் பேச்சுத்தமிழில் மண்மணமிக்க கதைகளை படைத்தார். அவரது படைப்புகளில் கரிசல் நிலவியலும், மக்களின் சமூக வாழ்வியலும் இடம்பெற்றிருந்தன. கரிசல் வட்டார அகராதியை உருவாக்கிய முன்னோடியாக அவர் திகழ்ந்தார். கரிசல் கதைகள், கதவு, பெண் கதைகள், கிராமியக் கதைகள் போன்ற எண்ணற்ற சிறுகதைகளையும், கிடை, பிஞ்சுகள் போன்ற குறுநாவல்களையும், கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கர் போன்ற நாவல்களையும், எண்ணற்ற கட்டுரைகளையும் எழுதி இலக்கியத் துறையில் தனி முத்திரை பதித்தார்.

1991-ஆம் ஆண்டு “கோபல்லபுரத்து மக்கள்” என்ற நாவலுக்காக அவர் சாகித்ய அகாதமி விருது பெற்றார். கி.ராஜநாராயணனுக்கு இலக்கிய சிந்தனை விருது, தமிழ்நாடு அரசின் விருது, மனோன்மணியம் சுந்தரனார் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாவல்கள் மூலம் எண்ணற்றோர் இதயங்களில் வாழ்ந்த கி.ராஜநாராயணன் கடந்தாண்டு மே மாதம் 17ஆம் தேதி மீளாத் துயில் கொண்டார்.

தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த அவரது நினைவைப் போற்றும் வகையில் அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தை 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பித்த தமிழக அரசு, அதனை கடந்த மாதம் 11ம் தேதி திறந்து வைத்தது. அதன் தொடர்ச்சியாக, கோவில்பட்டியில், 220 சதுர மீட்டர் பரப்பளவில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் நினைவரங்கம், முழு உருவ வெண்கலச் சிலை, மின்னணு நூலகம் ஆகியவற்றையும் அமைத்து கி.ரா.வுக்கு பெருமை சேர்த்துள்ளது தமிழக அரசு. இவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

கி.ரா. நினைவரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகத்தில் உள்ள தொடுதிரை கணினியில் கி.ரா. எழுதிய புத்தகங்களின் தொகுப்புகள் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்குள்ள நூலகத்தில் கி.ரா எழுதிய அனைத்து புத்தகங்களும் வாசகர்கள் படிப்பதற்காக வைக்கப்படவுள்ளன.பொதுமக்கள் கி.ராஜநாராயணின் படைப்புகளை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் அவர் எழுதிய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. தனது இறுதி நாட்களில் புதுச்சேரியில் அவர் பயன்படுத்திய பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த நினைவரங்கம் கோவில்பட்டி பகுதி மக்கள் மற்றும் எழுத்தாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படைப்பாளிகள் நிரந்தரமானவர்கள்; அழிவதில்லை என்பதற்கு கி.ராவின் எழுத்துக்களும் அவரைப் போற்றி உருவாக்கப்பட்டுள்ள நினைவரங்கமுமே சாட்சியாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.