ஏழ்மையே இல்லாத நாள் என்று வரும்? இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்

மனித வாழ்வியலில் ஒருவனுக்கு கிடைக்கும் மீளா சாபம் வறுமை….தான் ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் குடிக்க கஞ்சும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருந்தால் போதும் என பிரார்த்தனைகளை வைக்கும் யாரும், அதற்கு கீழ் நிலையில்…

னித வாழ்வியலில் ஒருவனுக்கு கிடைக்கும் மீளா சாபம் வறுமை….தான் ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் குடிக்க கஞ்சும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருந்தால் போதும் என பிரார்த்தனைகளை வைக்கும் யாரும், அதற்கு கீழ் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை பற்றி நினைப்பதில்லை.. யாரும் விரும்பாத வறுமை வன்முறை மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் உருவாக்கப்பட்டது. பாரிஸில் உள்ள ட்ரோகாடெரோவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டனர். இங்குதான் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் கையெழுத்தானது.

வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை என சொல்லப்படுகிறது. பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்து வரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதனால் இவை, அனைத்துலக வளர்ச்சி, பொது நிர்வாகம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன. வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை காரணமாக, வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே கொள்ளப்படுகின்றது. சமயங்களும், பிற அறநெறிக் கொள்கைகளும் வறுமையை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றன.

வறுமையை முற்றிலும் வறுமை (absolute poverty) என்றும், ஒப்பீட்டு வறுமை (relative poverty) என்றும் இருவகைப்படுத்துகின்றனர். முற்றிலும் வறுமை என்பது ஒரு குடும்பத்தின் வருமானம் அக்குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவில் மிகக் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. மிகக் குறைந்த அளவு வாழ்க்கைத் தரத்திற்கும் கீழான நிலையில் உள்ளவர்களை இது குறிக்கும். ஒப்பீட்டு வறுமை என்பது இரண்டு பிரிவினரின் வாழ்க்கைத் தரத்திற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பதாக கூறப்படுகிறது. அண்டம் முழுவதும் வறுமையில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் நாடுகள் இன்னும் உள்ளது என்பதோடு, பசியால் மட்டுமே உயிரைவிடும் சாமானியனுக்கும் கீழ் உள்ள மனிதர்களின் வாழ்வியலை எப்படி பார்ப்பது என்றே தெரியவில்லை….

“இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.”

என திருவள்ளூவர் எழுதிவைத்திருக்கிறார். வறுமை என்னும் ஒரு பாவி ஒருவனிடம் வந்துவிட்டால், அவனுக்கு இம்மையிலுள்ள உலக இன்பமும், மறுமையின் சுவர்க்க இன்பமும் இல்லாமல் போய்விடும் என்பதே இந்த குறளுக்கு பொருள். அதேநேரத்தில் வறுமையிலும் மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காத எத்தனையோ மனித மனங்கள் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.. ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் அதே வேளையில் வறுமை பட்டியலில் சேர்க்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டுதான் வருகிறது. குறிப்பாக நைஜீரியா, காங்கோ, எத்தியோபியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் வறுமையில் இருந்து மீண்டு வரமுடியாமல் தவிப்பதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் சேர்ந்திருப்பது வேதனைக்குரியது. 2022-ம் ஆண்டுக்கான உலக பட்டினிக்குறியீடு பட்டியல் நேற்றை தினம் வெளிவந்தபோது, அதில் இந்தியா 107-வது இடத்தை பிடித்துள்ளது. பசி விவகாரத்தில் இந்தியா தீவிர அபாயம் கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயரத்துக்கு தகுந்த எடை இல்லாத குழந்தைகள் இந்தியாவில் அதிகம் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.”

ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதென்றால், அந்த வறுமையைப் போலத் துன்பம் தருவது அந்த வறுமையேயன்றி யாதுமில்லை என்கிறார் வள்ளூவர். வறுமையில் உள்ளவர்களுக்கு ஆதரவே, நாம் வறுமையில் இருப்பதால் அதற்கு உயர்வான வாழ்க்கைக்கு ஆசைப்படகூடாது என்ற மனநிலையை மருந்தாகிறது சில சமயங்களில். யாரும் விருப்பப்படாத வறுமை, இங்கு பலபேரை விட்டு வைப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். 1950-களிலிருந்து இந்திய அரசு மற்றும் அரசு-சாராத நிறுவனங்கள் வறுமையை ஒழிக்கப் பல திட்டங்களை, உணவு மற்றும் இதர அவசியத் தேவைகள், கடன்கள் பெற அணுகுவது, விவசாய தொழில் நுட்பங்கள் மற்றும் விலை ஆதரவுகள் மற்றும் கல்வி மேம்பாடு மற்றும் குடும்ப நலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றைத் தொடங்கினர். இத்தகைய வழிமுறைகள் பஞ்சத்தை ஒழிக்க, முழுமையான வறுமைக் கோட்டினை பாதியளவுக்கு மேல் குறைக்க, எழுத்தறிவின்மையை குறைக்கவும் மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டினை குறைக்கவும் உதவியதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.


ஒவ்வொரு நாடும் வறுமையை ஒழிக்க புது புது திட்டங்கள் கொண்டுவருவதாக படிக்கும் அதே செய்தி தாள்களில், பசி பட்டினியால் மட்டுமே உயிரை இழக்கும் மனிதர்களையும் படித்து கடந்து கொண்டிருக்கிறோம். ஏழ்மை நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதற்கு அரசியல்வாதிகள், ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தாமை போன்ற காரணங்கள் உள்ளன. இருப்பினும், ஏழைகளின் பசியை போக்க அக்கறை இல்லாததே மேலும் ஒரு காரணம். ஏழ்மையில் இருக்கும் யாரும் தங்களை நாற்காலியில் அமர வைத்து ராஜ மரியாதைகளை கேட்கவில்லை. பசி வராத அளவில் உணவை தாருங்கள் என்றுதான் இன்றளவும் மன்றாடுகிறார்கள். இதனை நாம் படிக்கும்போது, தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வார்த்தைகளின் உணர்ச்சிப்பூர்வமான அர்த்தம் புரியம். இந்த சட்டத்திருத்தங்கள் அனைத்தும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றுகிறது. ஏழைகளை மேலும் ஏழைகளாக மாற்றுகிறது. அன்றைய காலங்களில் மக்கள் பசி மன்னர்களின் காதுகளுக்கு செல்லும், அதனால் வறுமையை போக்க திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் இப்போதைய சூழலில் வறுமையில் இருப்பவர்கள் மறைக்கப்படுவதும், அவர்களுக்கான முழுமையான திட்டம் சென்றடையவில்லை என்பதும் ஒரு தொடர் பார்வையாக இருப்பதாக மூத்தவர்கள் கூறுகின்றனர்.


யார் எப்படியே, வறுமை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. வறுமை ஒழிப்போடு, அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இன்றைய நாளின் நோக்கம். நாம் விருப்பமான உணவை சாப்பிட ஆசைப்படும் அதே வேளையில், பலர் சாப்பிட ஏதாவது இருந்தால் போதும் என்ற படியில் நிற்கின்றனர் என்பதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும். நாம்மால் உதவ முடியவில்லையே என நினைக்கும் பலர், தான் வீணாக்கும் உணவையும், செல்வத்தையும் வழங்க முன்வந்தாலே பலருக்கு பசிப்பினை போகும் என்பதுதான் உண்மை..வளர்ச்சியை நோக்கி செல்லும் நாம் பசி, பட்டினி இல்லை, வறுமை இல்லை என்று சொல்லும் நாளே வறுமை ஒழிக்கப்பட்ட நாள்…

– இரா.நம்பிராஜன் 

Twitter ID: https://twitter.com/Nambijournalist

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.