800 கோடியை தொட்ட உலக மக்கள் தொகை…11 ஆண்டுகளில் 100 கோடி உயர்ந்தது…

800 கோடி…இன்றைய தேதியில் உலக மக்கள் தொகை எண்ணிக்கை இது. இந்த எண்ணிக்கை ஒரு நம்பர் என்றாலும், அந்த நம்பர் பல்வேறு  புள்ளி விபரங்களையும், செய்திகளையும் சொல்லுகிறது. 218 ஆண்டுகளில் 8 மடங்கு உயர்வு…

800 கோடி…இன்றைய தேதியில் உலக மக்கள் தொகை எண்ணிக்கை இது. இந்த எண்ணிக்கை ஒரு நம்பர் என்றாலும், அந்த நம்பர் பல்வேறு  புள்ளி விபரங்களையும், செய்திகளையும் சொல்லுகிறது.

218 ஆண்டுகளில் 8 மடங்கு உயர்வு

உலக மக்கள் தொகையில் கடைசியாக ஒரு 100 கோடி கடந்த 11 ஆண்டுகளில் சேர்ந்தது. அதாவது 2011ம் ஆண்டு 700 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை தற்போது 800 கோடியை எட்டியுள்ளது.

ஆனால்  முதல் 100 கோடியை உலக மக்கள் தொகை எட்டுவதற்கு  6804 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. கிமு 5 ஆயிரம் ஆண்டுகளிலிருந்து ஒரு கணக்கை எடுத்தால் மக்கள் தொகை 100 கோடி ஆனது கி.பி.1804ம் ஆண்டுதான். அதிலிருந்து தற்போதைய மக்கள் தொகையான 800 கோடியை ஒப்பிடும்போது கடந்த 218 ஆண்டுகளில் 8 மடங்கு மக்கள் தொகை அதிகரித்துள்து. 6804 ஆண்டுகளில் 100 கோடியாக உயர்ந்த மக்கள் தொகை கடந்த 218 ஆண்டுகளில் மட்டும் 700 கோடி உயர்ந்துள்ளது.

இறப்பு விகிதம் குறைந்தது

மக்கள் தொகை 19ம் நூற்றாண்டிலிருந்து எந்த அளவிற்கு வேகமாக அதிகரித்து வந்துள்ளது என்பதை இந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 48 ஆண்டுகளில் மட்டும் இரண்டு மடங்காக மக்கள் தொகை உயர்ந்துள்ளது. 1974ம் ஆண்டு 400 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 800 கோடியாக அதிகரித்துள்ளது.

இப்படி மக்கள் தொகை வேகமாக அதிகரித்திருப்பது உலகம் முன்பு  பல்வேறு சவால்களை வைத்திருந்தாலும், சில நன்மையான அம்சங்கள் நிகழ்ந்திருப்பதை இந்த புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அதாவது, வறுமையால் ஏற்படும் பட்டினிச்சாவுகள் குறைந்திருப்பது,  மருத்துவத்துறை வசதிகள் அதிகரித்திருப்பதால் இறப்பு விகிதம் குறைந்திருப்பது, பிரசவகாலத்தில் ஏற்படும் தாய், சேய் உயிரிழப்புகள் குறைந்திருப்பது, பாலின சமமின்மை குறைந்திருப்பது மற்றும் மக்களின் ஊட்டச்சத்து  அதிகரித்திருப்பது போன்றவற்றை இந்த புள்ளி விபரங்கள் உணர்த்துகின்றன.

அதே நேரம் இனி மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் படிப்படியாக குறையும் என்று கூறப்படுகிறது. அதாவது உலக மக்கள் தொகை அடுத்த 100 கோடி அதிகரிப்பதறகு 15 ஆண்டுகள் ஆகும் என்றும், அதற்கடுத்த 100 கோடி சேர்வதற்கு 21 ஆண்டுகள் ஆகும் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அடிப்படையில் வரும் 2058ம் ஆண்டு உலக மக்கள் தொகை 1000 கோடியை எட்டும் என கணிக்கப்படுகிறது.

சீனாவும், இந்தியாவும்…

தற்போது உலகின் மொத்த மக்கள் தொகையில் 36 சதவீதம் பேர் சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே வசிக்கின்றனர். 144 கோடி மக்கள் தொகையுடன் உலகின் முதல் இடத்தில் சீனா உள்ளது. 138 கோடி மக்கள் தொகையுடன் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. அடுத்த ஆண்டு சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சிவிடும் என்றும் கணிக்கப்படுகிறது.

உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகளைவிட, வளர்ச்சி குறைவான நாடுகளில்தான் மக்கள் தொகை அதிகரிப்பு அதிகமாக உள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  1950ம் ஆண்டு உலக மக்கள் தொகையில் அதிக வருவாய் கொண்ட நாடுகளின் பங்களிப்பு  28 சதவீதமாக இருந்தது. தற்போது அந்த அளவு  16 சதவீதமாக குறைந்துள்ளது.  உலக மக்கள் தொகையில் வருவாய் குறைந்த நாடுகளின் பங்களிப்பு 1950ம் ஆண்டு 36 சதவீதமாக இருந்தது. தற்போது அது 53 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதிகம் மாசுபடுத்துவது யார்?

உலக மக்கள் தொகையில் குறைவான பங்களிப்பை வகித்தாலும் வளர்ச்சி அடைந்த நாடுகள்தான் உலகை மாசுபடுத்துவதில் அதிகம் பங்கு வகிக்கின்றன. உலகில் வெளியாகும் கார்பன்டை ஆக்சைடின் அளவில் 7ல் ஒரு பங்கைதான், மக்கள் தொகை அதிகம் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் வெளியிடுவதாக  ஐ.நா.சார்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் புவி வெப்பமடைதலுக்கும் மக்கள் தொகை அதிகரிப்புக்கும் தொடர்பு இல்லை என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

800 கோடியாக மக்கள் தொகை அதிகரித்திருத்திருப்பதை நினைத்து பீதி அடைய வேண்டியதில்லை என்றும் கூறும் பொருளாதார வல்லுநர்கள், மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைவிட வளங்கள் உருவாக்கப்படும் விகிதம் அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டுகின்றனர்.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.