உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான முதல் சுற்றை சமன் செய்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா!

உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான முதல் சுற்றை இந்திய வீரர் பிரக்ஞானந்தா சமன் செய்துள்ளார். உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது.…

உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான முதல் சுற்றை இந்திய வீரர் பிரக்ஞானந்தா சமன் செய்துள்ளார்.

உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா, உலகின் 2ஆம் நிலை வீரரான ஹிகாரு நகமுராவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினார். காலிறுதிச் சுற்றில் சக நாட்டை சேர்ந்தவரான அர்ஜூன் எரிகாசியுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்கு பிறகு பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அத்துடன், 2024ல் நடைபெறும் கேன்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு இளம் வயதில் தகுதி பெற்ற 3வது வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

இதனை அடுத்து சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் உலகின் 3ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஃபேபியானோ கருணாவுடன் பிரக்ஞானந்தா பலப்பரீட்சை நடத்தினார். இந்த போட்டியும் டை பிரேக் வரை சென்றது. டை பிரேக்கரில் 3.5 – 2.5 என்ற புள்ளிகள் முன்னிலையில் ஃபேபியானோ கருணாவை வீழ்த்தி பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியர் என்ற சாதனையை அவர் இதன் மூலம் படைத்தார். மேலும், உலக கோப்பை இறுதி போட்டிக்கு இளம்வயதில் முன்னேறிய முதல் வீரர் என்ற சாதனையையும் பிரக்ஞானந்தா நிகழ்த்தினார்.

உலகின் 3 மற்றும் 2ஆம் நிலை வீரர்களை வீழ்த்தியுள்ள பிரக்ஞானந்தா உலக கோப்பை சாம்பியன் பட்டம் வெல்வதற்கு இன்னும் கார்ல்சனை மட்டுமே வீழ்த்த வேண்டியுள்ளது. சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் உள்பட கார்ல்சனை 5 முறை பிரக்ஞானந்தா தோற்கடித்துள்ளார். கார்ல்சனிடம் 8 முறை தோல்வியை சந்தித்துள்ளார். மேலும் 6 முறை டிரா செய்துள்ளார்.

இந்நிலையில், பிரக்ஞானந்தா இன்று (22.08.2023) மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற இறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், போட்டியின் அடுத்த சுற்று நாளை(23.08.2023) நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி பெறும் பட்சத்தில் உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை மிக இளம் வயதில் வென்றவர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன் உக்ரைன் வீரர் ரஸ்லன் போனோமரிவ் தனது 19 வயதில் சாம்பியன் பட்டம் வென்றதே சாதனையாக இருந்து வருகிறது. உலக செஸ் தரவரிசையில் 29வது இடத்தில் உள்ள பிரக்ஞானந்தா கடந்த 10ஆம் தேதி தனது 18வது பிறந்த நாளை கொண்டாடினார். இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆன முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான பிரக்ஞானந்தா, இறுதி போட்டியிலும் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த இந்திய மக்கள் அனைவர் மத்தியிலும் அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.