உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அதிகாரப்பூர்வ தீம் பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. 10 நாடுகள் பங்கேற்கும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடர் இந்தியாவின் 10 முக்கிய நகரங்களை அலங்கரிக்க உள்ளதை அடுத்து, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அதிகாரப்பூர்வ தீம் பாடலை வெளியிட்டுள்ளது ஐசிசி.
”தில் ஜசன் போலே” என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பாடல், இசையமைப்பாளர் பிரீதம் இசையில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ளது. 3.21 நிமிடங்கள் கொண்ட இந்த பாடல் ONE DAY EXPRESS எனும் ரயில் பயணத்தின் போது நிகழ்வது போன்றே காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரன்வீர் சிங்கின் துடிப்பான மற்றும் துள்ளலான நடனம் இந்த பாடலை இன்னும் மெறுகேற்றியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுகளை அடையாளப்படுத்தும் விதத்திலான ஸ்டிக்கர்கள், காமிக் போஸ்டர்கள் என ஒவ்வொன்றும் பாலிவுட் ஸ்டைலில் படமாக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்கள் நடைபெறும் போது அதற்கான பிரத்யேக பாடல்கள் உறுவாகுவதும், வெளியாகுவது வழக்கம். எனவே அதே போல இந்த முறை இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதை முன்னிட்டு, ONE DAY EXPRESS என ரயில் பயணத்தின் போது ஒருங்கிணைந்து கொண்டாடுவது போன்று இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/ICC/status/1704384709646864506
இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றாலும் கலப்பு விமர்சனங்களை சமூக வளைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவில் இதற்கு முன்னதாக 3 முறை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுள்ளது. 1987 ஆம் ஆண்டு முதல் முறையாக பாகிஸ்தானுடன் இனைந்தும், 1996 இல் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இனைந்தும் கடைசியாக 2011 இல் தனி நாடாகவும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தியிருக்கிறது இந்தியா.
இதில் கடந்த முறை இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ”டே குமாகே” எனும் பாடல் உணர்வுப்பூர்வமாக இருந்ததும், ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.







