இந்திய நாடாளுமன்றம், மாநில சட்ட மன்றங்களில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு எப்போது நடைமுறைக்கு வரும்? இந்தியாவில் பெண்கள் இட ஒதுக்கீடு கடந்து வந்த பாதை குறித்து இப்போது பார்க்கலாம்….
இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி, பிரதிபா பாட்டில், திரெளபதி முர்மு என இரண்டு குடியரசுத் தலைவர்கள், பல்வேறு மாநிலங்களில் சற்றேறக்குறைய 15 பெண் முதலமைச்சர்களையும் கண்டுள்ளோம். தற்போதும் நாடாளுமன்ற மக்களவையில் 15 சதவீதம், மாநிலங்களவையில் 13 சதவீதம் பெண்கள் இடம்பெற்றுள்ளனர். மாநிலங்களின் சட்டமன்றங்களில் திரிபுராவில் 15 சதவீதம், மாநிலங்களில் 10 அல்லது அதற்கு குறைவான எண்ணிக்கையில்தான் பெண்கள் இடம் பெற்றுள்ளனர் என்கிறது புள்ளி விபரங்கள்.
உலகளவில் பெண்கள்
உலகளவில் நாடாளுமன்றங்களில் மக்கள் பிரநிதிகளாக, ரூவாண்டாவில் அதிகபட்சமாக 61 சதவீதம் பெண்கள் உள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில், கியூபாவில் 53 சதவீதம், மெக்ஸிகோ, நியூஸிலாந்தில் சரிபாதியும் பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் 29 % பிரிட்டனில் 35 % சீனாவில் 25 %, ரஷ்யாவில் 15 % சதவீதம் பேரும் பெண்கள் உள்ளனர். அண்டை நாடுகளான நேபாளத்தில் 33 %, வங்கதேசத்தில் 21%, பாகிஸ்தானில் 20 %, இலங்கையில் 5 சதவீதம் பெண்கள் நாடாளுமன்றங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.
விடுதலைக்கு முன்பே கோரிக்கை
இந்தியாவில் பெண்களுக்கு பிரதிநிதித்தும் வேண்டும் என்கிற கோரிக்கை நூறாண்டுகளை நெருங்குகிறது. ஆம், நாடாளுமன்றம், சட்ட மன்றங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் வேண்டி 1931ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கால இந்திய பிரதமரிடம் ஷா நவாஸ் பேகம், சரோஜினி நாயுடு உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அரசியல் நிர்ணய சபையில் அப்போதிருந்தவர்களின் ஒத்துழைப்பின்மையால், இந்த கோரிக்கை நடைமுறைக்கு வரவில்லை. இதைத் தொடர்ந்து உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து கொண்டிருந்தாலும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்ட முன்வடிவு கால் நூற்றாண்டுக்கு மேல் நாடாளுமன்றத்தில் முயற்சிக்கப்பட்டு வருகிறது.
உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு
நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு முதல் கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா 1987ல் ராஜூவ்காந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்டது. உரிய ஆதரவு கிடைக்காததால் அந்த மசோதா நிறைவேறவில்லை. இதையடுத்து 1991ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேறியது. தமிழ்நாட்டில் 1996ல் உள்ளாட்சி தேர்தலில் இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. இதன்படி இன்றைக்கு நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிகளாக உள்ளனர்.
நாடாளுமன்றத்தில் மசோதா
நாடாளுமன்ற, சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா கடந்த 1996 தேவகவுடா ஆட்சியில் 81வது சட்டத்திருத்த மசோதாவாக நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. போதிய ஆதரவின்மையால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கூட்டுக் குழுவின் அறிக்கை 1996ம் ஆண்டு இறுதியில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், மசோதா மீதான விவாதம் நடைபெறுவதற்கு முன்பாக மக்களவை கலைக்கப்பட்டதால், மசோதா ரத்தானது.
அடுத்து அமைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அன்றைய சட்ட அமைச்சராக இருந்த அதிமுகவின் எம். தம்பிதுரை மசோதாவை தாக்கல் செய்தார். அப்போதும் மசோதாவிற்கு ஆதரவு கிடைக்காமல், நிறைவேறவில்லை.
இதைத் தொடர்ந்து 1999, 2002, 2003 ஆண்டுகளில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஆண்ட பாஜக, எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், இடதுசாரி உறுப்பினர்கள் ஆதரித்த போதும், மசோதா நிறைவேற்றப்படவில்லை.
இதையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது மாநிலங்களவையில் அறிமுகமான மசோதா, 2010 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் அறிமுகப்படுத்தபடவில்லை. இதனால், மக்களவை கலைக்கப்பட்டதும் மசோதாவும் காலாவதியானது.
நிறைவேறிய மசோதா
இந்நிலையில், 2023 செப்டம்பர் 19ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நரேந்திர மோடி ஆட்சியில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்கு பிறகு 454 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவை எதிர்த்து 2 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆளும் பாஜக தொடங்கி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்று ஆதரவளித்துள்ளன. அதேநேரத்தில், குறைகளையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஆட்சிக் காலத்தின் நிறைவுப் பகுதியில் தேர்தலுக்காக மசோதாவைக் கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். மசோதா நிறைவேற்றப்பட்டாலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதிகள் மறு வரையறைக்கு பின்னர் நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளது. இதுதான் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ’’பெண்களுக்கு 33 இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா புதியதில்லை. கடந்த 2010ல் காங்கிரஸ் ஆட்சியில் இந்தமசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. ஆனால், மக்களவையில் நிறைவேறவில்லை. அந்த மசோதாவை முன்னெடுத்துச் சென்றிருந்தால், இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கும். தேர்தலைக் கருத்தில் கொண்டு தற்போது கொண்டு வந்துள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதிகள் மறு வரையறை நடைபெறாத வரை இதை நடைமுறைப்படுத்த முடியாது’ ‘என்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறுகையில், “கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக, தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருவது, அரசியல் நாடகம்.’’ என்கிறார்.
எப்போது நடைமுறைக்கு வரும்?
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை. அப்போது நடைபெற வேண்டிய கணக்கெடுப்பு வரும் 2026ல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 2029ல் நடைமுறைக்கு வரலாம் என்கிறார்கள். இன்னும் தாமதமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின்னர் தொகுதி மறு வரையறை செய்யப்படும் என்பதும் அதற்கு பின்னர்தான் மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்படுவதும் தென் மாநிலங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டுக்கு பாதிப்பா…?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை இன்னும் நடத்தாத ஒரே நாடு இந்தியா. எப்போது நடைபெறும் என்ற உத்தரவாதத்தையும் இதுவரை பா.ஜ.க. அரசு தரவில்லை. எப்போது நடைபெறும்? என்று தெரியாத மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதன் அடிப்படையில் நடக்கவுள்ள தொகுதி மறுவரையறை – அதன் பேரில் 2029 தேர்தலில் நடைமுறைக்கு வரும் மகளிர் ஒதுக்கீட்டுக்கு இப்போது சட்டம் இயற்றும் விசித்திரம் பா.ஜ.க.வால் அரங்கேற்றப்படுகிறது.
தமிழ்நாட்டின் மீது – தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை (delimitation) உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கிற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
மகளிர் மசோதாவை வரவேற்கும் அதே வேளையில், மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி, தென்னிந்திய மக்களை ஆட்கொண்டுள்ள அச்சத்தைப் போக்கிட வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது சலுகை அல்ல, உரிமை என்று சொல்லப்படும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா… அரசியல் கடந்து….. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பில்லாமல் நடைமுறைக்கு வருமா….?







