உலக புத்தக தின கொண்டாட்டம்

அறியாமை எனும் இருளை நீக்கி வாழ்வில் வெளிச்சம் பெற வைக்கும் புத்தகங்களை கொண்டாடும் வகையில் இன்று  உலக புத்தக தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. புத்தகங்கள் என்பன வெறும் தாளும், மையுமால் ஆனது மட்டுமல்ல.…

அறியாமை எனும் இருளை நீக்கி வாழ்வில் வெளிச்சம் பெற வைக்கும் புத்தகங்களை கொண்டாடும் வகையில் இன்று  உலக புத்தக தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

புத்தகங்கள் என்பன வெறும் தாளும், மையுமால் ஆனது மட்டுமல்ல. அதற்குள் எழுதியவரின் எண்ணமும், உழைப்பும் இருக்கிறது. ஒரு செடியில் வேருக்கும், விழுதுக்கும் உள்ள தொடர்பு போன்றது தான் புத்தகங்களுக்கும் வாசிப்பவனுக்குமான  தொடர்பு என்கின்றனர் எழுத்தாளர்கள்.

புத்தகங்களின் அவசியம், நூலகங்களின் வளர்ச்சி, படைப்பாளி – பதிப்பாளர் – வாசகர் இணைப்பு, புத்தக வாசிப்பு, பராமரிப்பு, தொகுப்பு மற்றும் மொழிகளிடையே புத்தகப் பரிமாற்றம் உள்ளிட்ட இலக்குகளை நோக்கிச் செல்வதற்காக, உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியர் பிறந்தநாளை உலக புத்தக தினமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது.

இந்நாளை சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23-ஆம் தேதியன்று கொண்டாடி வருகின்றனர்.

வரலாற்றின் தொடர்ச்சியை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், அறிவியல் கண்ணோட்டத்தை பரவலாக்க புத்தக வாசிப்பு நமக்கு பெரிதும் உதவுகிறது. இன்றைய சவால் நிறைந்த சூழலில், மானுடத்தின் மேன்மைகளைப் போற்றவும், சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுப்பதில் புத்தகங்களே நமக்கு சிறந்த ஆசானாகவும், வழிகாட்டியாகவும் உள்ளது என்கின்றனர் அறிஞர்கள்.

உலக புத்தக தினத்தில் புத்தக வாசிப்பை பரவலாக்கும் முயற்சியை ஒவ்வொருவரும் தொடரவேண்டும் என இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டும் என விரும்புவதாக, படைப்பாளிகள், வாசகர்கள் என அனைவருக்கும் தெரிவிக்கின்றனர்.

பரசுராமன்.ப, மாணவ ஊடகவியலாளர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.