விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின், ட்ரெயிலர் ரிலீஸாகி இணையத்தையே ரகளையாக்கியுள்ளது. கண்மணி(நயன்தாரா), கதீஜா (சமந்தா) என இருவரையும் ரேம்போ (விஜய் சேதுபதி) காத்துவாக்குல ஒரே நேரத்தில் காதலிப்பதே இப்படம். விக்னேஷ் சிவனின் நானும் ரவுடிதான் முடிந்தவுடனே இப்படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டாலும் பல்வேறு காரணங்களால் தாமதமானது. முதலில் திரிஷாவும், நயன்தாராவும் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. பின்பு திரிஷாவுக்கு பதில் சமந்தா தேர்வு செய்யப்பட்டார். இதற்கும், சமந்தா ‘உலக நாயகி’ ஆவதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம்..ஆனால் சம்பந்தப்படுத்துவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் நம் கண்முன்னே இருப்பதகாக சினிமா வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தமிழ் சமூகத்திலும் ஆண்களின் ஆதிக்கம் அதிகமிருப்பதால் தொடர்ந்து பெரும்பாலான கதைகள் ஆண்களை மையப்படுத்தியே இருந்திருக்கிறது. இருப்பினும், எம்.ஜி.ஆர் – சிவாஜி காலம் தொட்டே பெரிய ஹீரோ படங்களின் வெற்றி தோல்விகளில் ஹீரோயின்களுக்கும் மிகப்பெரிய பங்கு இருந்துவருகிறது. சரோஜா தேவி, பத்மினி, சாவித்ரி, ஜெயலலிதா என வெற்றிக்கதாநாயகிகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். ஆனாலும், ஹீரோயின்களுக்கான ரசிகர்களின் ‘மாஸ்’ கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டே வந்துள்ளது.
இந்நிலையில், ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன கொழந்தையும் சொல்லும்’ என்று பாடிய தமிழ் சினிமா ரசிகர்களிடம், ‘அதே கொழந்தைட்ட போய் லேடி சூப்பர் ஸ்டார் யாருன்னு கேளுங்க! நயன்தாராதான்னு அவங்க அப்பாவும் சேர்ந்து சொல்லுவாரு’ என்பது போல் மாஸ் காட்டியவர் நயன்தாரா. சினிமாவின் ஆரம்பகாலத்தில் நயன்தாராவுக்கு ஷூட்டிங்கிற்கு வர ‘கார்’ கூட வழங்கபடவில்லை. தினமும் அரசு பேருந்தில் வந்து செல்வார் என்ற தகவல்கள் உண்டு. 10 ஆண்டுகள் கடந்தால் அவரின் ‘கால்ஷீட்’ கிடைத்தால் அந்த படம் ‘ஹிட்’என்று இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் நம்பும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளார்.
காதல், பிரிவு, ஏமாற்றம், துரோகம், தனிமை என அனைத்து அத்தியாங்களையும் கடந்து வந்தவர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்திலேயே ‘லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா’ என்று டைட்டில் கார்டு போடும் அளவிற்கு அசுர வளர்ச்சியடைந்தார். விழா மேடைகளில் ரஜினி – கமலுக்கு இணையாக நயன்தாராவிற்கும் கைத்தட்டல்களும் விசில்களும் பறந்தன.
நயன்தாராவை போலவே சமந்தாவும் கடந்த சில மாதங்களாக பல்வேறு உளவியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். நாக சைதன்யாவுடன திருமண உறவை முடித்துக் கொள்வதாக இருவருமே மனமுவந்து அறிவித்த பின்னரும், தங்களின் மனம்போன போக்கில் பல்வேறு முன்முடிவுகளோடு சமந்தாவை கூண்டில் ஏற்றினர் இணையவாசிகள். இருவர் மனம் விரும்பி இணைவது போல், மனமுவந்து பிரிவதுமே அவர்களின் தனிப்பட்ட உரிமை எனும் அடிப்படை நாகரீகத்தை கூட புரிந்துகொள்ளாமல் பயில்வான்தனமாக வன்மத்தை கக்கினர். அப்படி வன்மத்தை கக்கியவர்களை எல்லாம் மிக நாகரீகமான முறையில் கூலாக ‘லெப்ட் ஹாண்டில்’ டீல் செய்தார் சமந்தா.
இந்நிலையில், நயன்தாராவை போலவே சினிமாவில் தன்னுடைய அடுத்த அத்தியாயத்தை உற்சாகமாக தொடங்கியுள்ளார் சமந்தா. அவரின்‘ஊ சொல்றியா மாமா’ பாடலே வன்மபுரத்தார்களை வருத்தெடுப்பது போல் அமைந்திருந்து. இந்நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் காட்சிகளில் நயன்தாராவோடு போட்டி போடுக்கொண்டு ரசிகர்களின் மனங்களை கொள்ளை அடித்துள்ளார் சமந்தா. 70-களில் வந்த ரஜினி-கமல் ‘காம்போ’ போல ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் நயன்தாரா – சமந்தா காம்போ அட்டகாசமாக அமைந்துள்ளது. படத்தின் ‘ப்ரிவியூ’-வை பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் சமந்தாவை நயன்தாரா கட்டியணைக்கும் காட்சிகள் இருவரின் ரசிகர்களையும் நெகிழ வைத்துள்ளது.
நிற்க, தன் படங்களின் ஒவ்வொரு கதையையும் தெளிவாக தேர்ந்தெடுப்பது, தன்னுடைய கதாப்பாத்திரங்களுக்கென மெனக்கெடுவது, தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது என ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான அனைத்திலும் கவனம் செலுத்துவருகிறார் சமந்தா. அவருடைய அடுத்தடுத்த தெலுங்கு படங்களான சகுந்தலம், யஷோதா ஆகிய படங்களின் சமந்தாவின் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தியே உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், சமந்தாவை போலவே நடிகர் கமலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை தேர்வுக்காக பல்வேறு கேலிகளுக்கும் வசவுகளுக்கும் ஆளானவர் தான். அவற்றையெல்லாம் கடந்து தான் உலக நாயகனாக உருவெடுத்தார். அதுபோல தூற்றுவார் தூறினாலும் அதையெல்லாம் கடந்து சினிமாவே தன் வாழ்க்கையென கொண்டு, அர்பணிப்போடு உழைத்துவரும் சமந்தாவை ‘உலக நாயகி’ என்றே அழைக்கலாம் என்பது சினிமா ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் சமந்தாவின் நடிப்பு, தோற்றம், அழகு என அனைத்து அம்சங்களுமே உலகின் எந்த மொழி படங்களில் அவர் நடித்தாலும் அம்மக்களால் கொண்டாடப்படுவார் என்பதால் ‘உலக நாயகி’எனும் பட்டத்திற்கு சமந்தாவை விட தகுதியான வேறு யாரும் இருக்க முடியாது என்றும் ரசிகர்களால் ஆணித்தரமாக கூறப்பட்டு வருகிறது.
ஆக, அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா’ என டைட்டில் கார்டு போடப்பட்டது போலவே, காத்துவாக்குல ரெண்டு காதலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன், ‘உலக நாயகி’சமந்தா என்று டைட்டில் கார்டு போடப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வளுத்துவருகின்றன. ஆவன செய்வாரா விக்னேஷ் சிவன்?
- வேல் பிரசாந்த்












