29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

மனித வளத்தை ஏற்றுமதி செய்யும் தமிழ்நாடு


மரிய ரீகன் சாமிக்கண்ணு

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இங்கு கல்வி கற்றுவிட்டு வெளிநாடு சென்று செல்வம் கொழிக்கும் மக்களின் நிலை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. மனித வளத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்திற்கு முந்திக்கொண்டு போகிறது. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு பிரச்னை அதிகரிக்கும் சூழலில், அதை தமிழ்நாடு அரசு எப்படி மாற்றப்போகிறது. 

என்ன வளம் இல்லை தமிழ்நாட்டில்:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ன்ன வளம் இல்லை இந்த திருநாட்டில். ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில். ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில், உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்”. விவசாயி திரைப்படத்திற்காக மருதகாசி எழுதிய இந்த பாடலை திமுகவின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக இருந்த எம்.ஜி.ஆர் திரையில் தோன்றி உணர்வு பொங்க பாடியதை யாராலும் ரசிக்காமல் அவ்வளவு எளிதாக கடக்க முடியாது. திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறிய ஆண்டிற்கும் இந்த பாட்டிற்கும் ஒரே வயது தான். 1967 ஆம் ஆண்டு இந்த பாடல் வெளியாகி இன்றோடு 55 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அந்நியர்களுக்கு நமது உழைப்பும், நமது வளமும் விற்கப்படுவது இன்று வரை நின்றபாடில்லை.


பிரெய்ன் டிரெய்ன்:
மக்களின் வளத்தை பயன்படுத்தி தனது மூளை உழைப்பை வளர்ந்த நாடுகளுக்கு சென்று சேவை செய்வதே பிரெய்ன் டிரெய்ன் என்பார்கள். இதன் மையமாக இந்தியாவின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. அதாவது, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்யும் முறையை பிரெய்ன் டிரெய்னிங் என்று மதிப்பிடலாம். உலக அளவில் இந்த பிரெய்ன் டிரெய்ன் முறை இந்தியாவில் தான் அதிகம் நடக்கிறது. கேரளா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உலக நாடுகளுக்கு மூளை உழைப்பாளர்களை ஏற்றுமதி செய்யும் முதல் நான்கு மாநிலங்களாக உள்ளன.

தமிழ்நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையிலான நபர்கள் மகராஷ்டிரா சென்று வெளிநாடுகளுக்கு செல்வதால், தமிழ்நாட்டின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நமது மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்றுவிட்டு வெளிநாடுகளில் தங்கி வேலை செய்கிறார்கள். முந்தைய ஆண்டுகளில் மருத்துவ துறையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டிற்கு சென்று பணி புரிந்தனர். இது, அண்மைக்காலமாக, தகவல் தொழில் நுட்ப துறையில் விரிவடைந்து ஐ.டி துறையில் அதிக நபர்கள், இங்கு மக்கள் பணத்தில் கல்வி கற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிகிறார்கள். இப்படி, தகவல் தொழில் நுட்பம், மருத்துவம் என உயர் கல்வி வரை நமது மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.


வளைகுடா நாடுகளுக்கு மனித ஏற்றுமதி:
மூளை வளத்தை பயன்படுத்தும் பிரெய்ன் டிரெய்ன் போலவே உடல் உழைப்பாளர்களும் வளைகுடா நாடுகளுக்கு செல்லுகின்றனர். அதாவது, மனித உழைப்பாளர்கள் வெளிநாடுகளுக்கு இரண்டு வகையில் ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள்.
1. ஆரம்ப கல்வி தகுதியோடு உடல் உழைப்பிற்காக வேலைக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் முதல் ரகம். வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு இவர்கள் அதிகம் சென்று கூலி உழைப்பாளர்களாக வேலை செய்கிறார்கள்.
2. உயர் கல்வியை முடித்துவிட்டு வளர்ந்த நாடுகளில் வேலை செய்பவர்கள் இரண்டாவது ரகம். அமெரிக்கா, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பணி செய்யும் மூளை உழைப்பாளர்கள் இவர்கள்.

கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு மட்டும் உடல் உழைப்பாளர்கள் வருடத்திற்கு 18லிருந்து 22 லட்சம் நபர்கள் வரை வேலைக்காக செல்கிறார்கள். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள ஐந்து குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் நபர் வேலைக்காக வெளிநாடு செல்கிறார்.

வெளிநாடுகளில் இருந்து பணப்பரிவர்த்தனை:
சேவை துறைக்கு அடுத்தபடியாக, மனித வளத்தை ஏற்றுமதி செய்வதன் மூலமாக கிடைக்கும் பணப்பரிவர்த்தனை இந்திய பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும் கூட இதன் முக்கியத்துவம் தனித்து அடையாளப்படுத்தக்கூடிய வகையில் தான் உள்ளது. வெளிநாடுகளில் பணிபுரிந்து பணம் அனுப்புவதன் மூலம் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில் இருந்து மட்டும் பண பரிவர்த்தனைகள் மூலம் இந்திய அரசுக்கு வருவாயாக சுமார் 58.7 சதவிகிதம் கிடைப்பதாக ரிசர்வ் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது.

என்ன தான் பிரச்னை?:
தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. 1947களுக்கு முன்பு வளர்ந்த நாடுகள் இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டு நம்முடைய உழைப்பை சுரண்டி வாழ்ந்தார்கள். தற்போது, இங்கிருந்து வளர்ந்த நாடுகளுக்கு வேலைக்காக செல்கிறார்கள். 20லிருந்து 25 லட்சம் பேர் வளைகுடா நாடுகளில் பல வருடங்களாக வேலை செய்கிறார்கள். வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதற்காகவே பல நிறுவனங்கள் சட்டப்படியும் சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தலைமறைவாகவும் வேலை செய்வதை பார்க்கலாம். இங்கு வேலை வாய்ப்பின்மை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்வதே இது போன்ற நிலை உருவாக காரணமாக கொள்ளலாம். தமிழ்நாட்டில், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தான் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. முன்னாள் நிதி அமைச்சராகவும் நீண்ட ஆண்டுகள் இந்திய அமைச்சரவையில் இடம்பெற்ற ப. சிதம்பரம் தொகுதியிலேயே அதிக அளவு வேலை தேடி வெளிநாடு செல்பவர்கள் இருப்பது பிரச்னையின் தன்மையை கூர்ந்து கவனிக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கல்வி முடித்துவிட்டு ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் நிலை தொடரவே செய்கிறது. வேலையின்மை திண்டாட்டத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு இன்னும் தனி கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தல் சமயத்தின் போதும், அனைத்துக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் வேலை வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை உறுதி செய்வதற்கான என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றால் கேள்வியே மிஞ்சுகிறது.


பலவிதமான கல்வித்தகுதிகள் இருந்தாலும் கூட வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. திமுக – அதிமுக என எந்த ஆட்சி அரியணையில் ஏறினாலும் கூட வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க முடியவில்லை. இதனாலேயே, இங்கு கல்வியை முடிக்கும் இளைஞர்கள் வேலை கிடைக்காததால் வளைகுடா நாடுகளையும் ஏகாதிபத்திய நாடுகளையும் நோக்கி படையெடுக்கும் நிலை உருவாகுகிறது.


எனவே, தமிழ்நாட்டின் மனித வளத்தை தமிழ்நாட்டின் எல்லைக்குள்ளேயே செழிப்பாக பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதை திமுக அரசு செய்யுமானால் இந்தியாவின் மாநிலங்களில் தமிழ்நாட்டின் பொருளாதார கட்டமைப்பு இன்னும் பல படி மேலே உயர்ந்து நிற்கும்.

  • நன்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading