”புதிய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடக்கம்” – இந்திய தேர்தல் ஆணையம்!

புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

இந்திய குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், மருத்துவக் காரணங்களுக்காக செய்வதாக கடந்த திங்கள்கிழமை இரவு குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையமானது புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் அதிகாரபூர்வமாக தொடங்கியதாக தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ”அரசியலமைப்பு பிரிவு 324 இன் கீழ், இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது. அதன்படி, குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் தொடர்பான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தேர்தலுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் தேர்தல் ஆணையமானது,” குடியரசுத் துணைத்தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் தயாரிப்பது மற்றும் தேர்தலை நடத்தும் அதிகாரி மற்றும் உதவித் தேர்தல் அதிகாரிகளை இறுதி செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” எனவும் தெரிவித்துள்ளது.

ஜெகதீப் தன்கரின் பதவிக் காலம் 2027 வரை இருக்கும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, புதிதாக குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.