செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமை தொகை திட்டம்!

மகளிருக்கான உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த…

மகளிருக்கான உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.

இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் மேம்பாட்டுதுறை, சுற்றுச்சூழல் மேம்பாடு என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்த மகளிர் உரிமைத்தொகை அறிவிப்பினை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

அப்போது, இந்த ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் நிலைநாட்டப்படுகின்றன. பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல், மகளிர் உரிமைத்தொகை- தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கே மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தோம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். மேலும், இந்த திட்டத்தினை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனவும் அறிவித்தார்.

மேலும், மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.