மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 54 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த திட்டத்தில் பதிவு செய்யாதவர்களுக்காக இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களை கண்டறியும் வகையில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பதியப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 1,428 ரேசன் கடைகளில் 17.18 லட்சம் குடும்ப அட்டைகள் பதிவாகியுள்ளன. இதில் முதற்கட்டமாக 704 ரேசன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1,730 சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட முகாம் முடிவடைந்த நிலையில் முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள 724 ரேசன் கடைகளில் 5 -ம் தேதி முதல் தொடங்கி வரும் 16-ம் தேதி வரை விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறுகிறது. இதில் விடுபட்டவர்களுக்கு வரும் 17-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் 2-வது கட்ட முகாம்கள் 5.8.2023 அன்று தொடங்கி 16.8.2023 வரை நடைபெற்றது. இந்த இரண்டாம் கட்ட முகாமில் இதுவரை 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் 19.8.2023 மற்றும் 20.8.2023 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்குமாறும் அரசு சார்பில் தெறிவிக்கப்பட்டது. இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர், வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்கள் மற்றும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விதிவிலக்கு அளிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகைபுரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாள்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு கட்டங்களாக நடைபெற்ற மகளிர் உரிமை திட்ட முகாம்களில், இதுவரை 1 கோடியே.54 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் குடும்பங்களை சேர்ந்த, தகுதி வாய்ந்த பெண்களும் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுவரை பதிவு செய்யாத மகளிர் இன்று முதல் 20ம் தேதி வரை நடைபெறும் மூன்று நாட்கள் சிறப்பு முகாம்களில் தங்களது விண்ணப்பத்தை அளித்து பதிவு செய்யும் படி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.