தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் இதுவரை 1.55 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களை கண்டறியும் வகையில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பதியப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 1,428 ரேசன் கடைகளில் 17.18 லட்சம் குடும்ப அட்டைகள் பதிவாகியுள்ளன.
இதில் முதற்கட்டமாக 704 ரேசன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1,730 சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05 தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1.55 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைப்பேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக வருவாய்த் துறையின்கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்கள் மற்றும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாள்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. பதிவு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்காதவர்கள் விரைவில் இணைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான சிறப்பு முகாம் இனி நடத்தப்பட வாய்ப்பு இல்லை எனவும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்ற விவரம் கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







