மகளிர் உரிமைத் தொகை திட்டம்; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு கடிதம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தன்னார்வலர்களை பணியமர்த்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்துக்கான வழிகாட்டி விதிமுறைகளை…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தன்னார்வலர்களை பணியமர்த்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.

பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்துக்கான வழிகாட்டி விதிமுறைகளை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. இந்த திட்டத்தின் சிறப்புப் பணி அலுவலர் இளம்பகவத், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையாளர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்ப பதிவு தன்னார்வலர் பணிக்கு இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பம் தெரிவிக்கும் தன்னார்வலர்களின் சம்மதம் பெற்று அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் வட்டாட்சியர்களுடன் இணைந்து தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் பணி ஒதுக்கீடுகள் செய்யப்படக்கூடாது என்றும், நியாய விலைக்கடை அளவிலான பணி ஒதுக்கீடுகள் வருவாய் வட்ட அளவில் செய்யப்பட வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.