மகளிர் உரிமைத் தொகை திட்டம் – பிரத்யேக ஏடிஎம் கார்டுகள் விநியோகிக்க ஏற்பாடு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக அச்சடிக்கப்பட்ட பிரத்யேக ஏடிஎம் கார்டுகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை தொடங்கவுள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து மொத்தம் 1.06 கோடி…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக அச்சடிக்கப்பட்ட பிரத்யேக ஏடிஎம் கார்டுகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளை தொடங்கவுள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து மொத்தம் 1.06 கோடி மகளிா் பயனாளிகளாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரா்கள் அளித்த விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக கைப்பேசிக்கு வரும் 18-ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும்.

தற்போது, இந்த திட்டத்துக்கு தகுதி பெற்ற பெண்களின் வங்கிக் கணக்குகளை சரி பார்ப்பதற்காக முதற்கட்டமாக ரூ. 1 செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இந்த திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த மாதத்துக்கான தொகை ரூ.1,000 செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், மகளிர் உரிமை தொகைக்காக கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கியுள்ள பயனாளர்களுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் புகைப்படத்துடன் வலதுபுறம் திட்டத்தின் பெயரும், இடதுபுறம் கூட்டுறவு வங்கியின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஏடிஎம் கார்டுகளில் உள்ள அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஏடிஎம் கார்டுகள் சரிபார்க்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பயனாளர்களுக்கு படிப்படியாக அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.