மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெகநாதன், பதிவாளர் சுப்பையன் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கூட்டுறவுத்துறை அதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.
கூட்டத்தையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது:
“மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்த பல்வேறு துறைகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கூட்டுறவுத் துறை சார்பாக அனைத்து நியாய விலை கடைகளில் இருக்கும் குடும்ப அட்டை தாரர்களுக்கும் இத்திட்டத்திற்கான விண்ணப்பம் வீடுகளில் கொண்டு சேர்க்கும் பணி முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 2.24 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விண்ணப்பம் வழங்கப்படும். மேலும் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4 வரை முதல்கட்ட முகாமும், ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் இரண்டாம் கட்ட முகாம் நடத்தப்பட உள்ளது.
இத்திட்டம் மூலம் ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள். சிறு குளறுபடி கூட இல்லாத வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த முகாம்களில் வங்கி கணக்கு துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குடும்ப அட்டைதாரர்களில் 21 லட்சம் பயணாளிகளுக்கு வங்கி கணக்கு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது ஒரு லட்சம் பேர் கூட்டுறவு வங்கியில் புதிய கணக்குகள் துவங்கி உள்ளனர். மேலும் 15 லட்சம் பேர் கூட்டுறவு வங்கியில் கணக்கு துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.”
இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.







