20 ஆண்டுகள்…ஆண் ஆதிக்கம் நிறைந்த தமிழ் சினிமா, கதாநாயகியாக வலம் வந்த ஒரு நடிகையைக்கூட இந்த அளவிலான காலத்தில் முகம் மறந்துபோகும் அளவிற்கு ஒதுக்கிவைத்துவிடும். கதாநாயகியாக ஒரு நடிகை அதிகபட்சம் ஐந்தாறு ஆண்டுகள்தான் செல்வாக்கோடு வலம் வரலாம் என்ற எழுதப்படாத விதியை தகர்த்தெறிந்திருக்கிறார் நயன்தாரா.
கடந்த 2003ம் ஆண்டு “மனசினக்கரே” என்கிற மலையாளப் படத்தின் மூலம் கதாநாயகியாக தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நயன்தாரா, அதே கதாநாயகி அந்தஸ்தோடு 20ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அதுவே ஒரு மிகப்பெரிய சாதனைதான். ஆனால் நயன்தாரா அதையும் தாண்டி அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். தமது 20ம் ஆண்டு கலைப்பயணத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக புகழின் உச்சத்தில் இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இது சுபமான முடிவு அல்ல…இனிமையான தொடக்கம். ஆம்…இனிதான் ஆரம்பமே என்பது போல் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி அமைந்துள்ளது. ஆண் சூப்பர் ஸ்டார்களின் படங்கள் எந்த அளவிற்கு கோடி கோடியாக வசூலை குவிக்கிறதோ, அதே அளவிற்கு, வசூலைக் குவிக்கும் படங்களில் நடிப்பதுதான் எனது அடுத்த இலக்கு என்கிறார் இந்த லேடி சூப்பர் ஸ்டார். இது சாத்தியமா?…முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இதற்கு முன்பு இதனை சாதித்துக் காட்டியிருக்கிறார் தெலுங்கு லேடி சூப்பர் ஸ்டாரான விஜயசாந்தி. அதுவும் ஆக்ஷன் ஹீரோயினாக.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சினிமாவில் பெண்கள் சண்டையிடுவது ஒரு காமெடியான விஷயமாகவே சித்தரிக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் விஜயசாந்தியின் சண்டைக் காட்சிகள் ஆண் ரசிர்களையும் விசிலடிக்க வைத்தது. ஆந்திராவின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்த சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கிருஷ்ணா உள்ளிட்டமுன்னணி ஹீரோக்களின் அதிரடி சண்டைக் காட்சிகளை எந்த அளவிற்கு ஆர்வத்துடன் பார்த்தார்களோ அதே ஆர்வத்துடன் விஜயசாந்தியின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளையும், ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். ஒரு மாஸ் ஹீரோவின் என்ட்ரியின்போது தியேட்டர் எந்த அளவிற்கு அதிரும் அதே போல் விஜயசாந்தியின் என்ட்ரியின்போதும் கைத்தட்டல்கள் காதைபிளந்தன. மரத்தைச் சுற்றி பாட்டுப்பாடும் கதாநாயகியாகதான் அவரும் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் பிற்காலத்தில் தன்னுடன் நடிக்கும் கதாநாயகர்களை மரத்தை சுற்றி தன்னுடன் டூயட் பாடுவதற்காக மட்டும் பயன்படுத்தும் அளவிற்கு திரையுலகில் ஆதிக்கம் செலுத்தினார்.
தமிழில் பாராதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் தெலங்கு படங்களில் கவனம் செலுத்திய விஜயசாந்தி, ஆரம்பத்தில் கமர்ஷியல் சினிமாக்களின் வழக்கமான கதாநாயகிகள் போலத்தான் வலம் வந்தார். கிளாமர் குயினாகத்தான் அவரும் முதலில் பார்க்கப்பட்டார். பின்னர் 1983ம் ஆண்டு வெளிவந்த நெட்டி பாரதம் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. பெண்களை மையப்படுத்தும் படங்களில் அவர் நடிக்கத் தொடங்கியது இந்த படத்திலிருந்துதான். தொடர்ந்து புரட்சிகரமான பெண் கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும் அவரை லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்த்தியது அவரது அதிடி ஆக்ஷன் படங்கள்தான். அந்த வகையில் மோகன் காந்தி இயக்கத்தில் விஜயசாந்தி நடித்த கார்தவ்யம் படம், அவரை தென்னிந்திய திரையுலகின் வசூல் சக்கரவர்த்தினியாக உயர்த்தியது. கம்பீரமான போலீஸ் அதிகரியாக இந்த படத்தில் நடித்திருந்த விஜயசாந்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். 90 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் உருவான அந்த படம் 7 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. தமிழில் வைஜெயந்தி ஐபிஎஸ் என்கிற பெயரில் இந்த படம் டப் செய்யப்பட்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து இதே பாணியில் சூர்யா ஐபிஎஸ் உள்ளிட்ட படங்களிலும் அதிடி ஆக்ஷன் ஹீரோயினாக, வலம் வந்து லேடி அமிதாப், இந்திய சினிமாவின் ஆக்ஷ்ன் குயின், என்றெல்லாம் புகழப் பெற்றார். ரஜினி, சிரஞ்சீவி போன்ற ஆண் சூப்பர் ஸ்டார்களுக்கு இணையான ஊதியத்தை லேடி சூப்பர் ஸ்டாரான விஜயசாந்தியும் பெற்றதாக கூறப்பட்டது.
திரையுலகில் பரிச்சார்த்த முறையில் மட்டுமல்ல பாக்ஸ் ஆபிஎஸ் ஹிட்டுகளாகவும் பெண்களை மையப்படுத்தும் படங்களை எடுக்கலாம் என நிரூபித்துக்காட்டியவர் விஜயசாந்தி. அந்த பாக்ஸ் ஆபிஸ் எல்லைகளை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியிலேயே தற்போது நயன்தாரா இறங்கியுள்ளார். 100 ஆண்டுகளை கடந்த இந்திய சினிமாவில், கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்களை எடுப்பதும் அதனை வெற்றிப் படமாக்குவதும் தற்போது வரை ஒரு சவாலான விஷயமாக இருப்பது ஒருபுறம் இருக்க இந்தியாவில் சினிமா துளிர்க்கத் தொடங்கியபோது பெண்களை அதில் நடிக்க வைப்பதே ஒரு சவாலாக இருந்துள்ளது.
1913ம் ஆண்டு இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படமான ராஜா ஹரிச்சந்திராவை தாதா சாஹேப் பால்கே உருவாக்கியபோது, தனது கற்பனைகளை காட்சிகளாக்க எவ்வளவோ சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவற்றில் ஒன்று கதாநாயகியை தேடுவது. சினிமாவில் நடிக்க எந்த பெண்மணியும் முன்வராததால் ஆண் ஒருவருக்கு பெண் வேடமிட்டு கதாநாயகியாக்கினார் பால்கே. அந்த வகையில் இந்திய சினிமாவின் முதல் கதாநாயகி பெண் அல்ல ஒரு ஆண். இப்படி பெண் வேடத்தையும், ஆண்களே நடிக்கும் அளவிற்கு சினிமாவில் ஆண்களின் எண்ணிக்கையும் ஆதிக்கமும் மேலோங்கியிருந்த காலத்தில், அதிரடி சண்டைக் காட்சிகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களாலும் நடிக்க முடியும் என இந்திய திரையுலகில் முதன் முதலில் நிரூபித்துகாட்டியவர் FEARLESS நாடியா.
அவர்தான் இந்தியாவின் முதல் ஆக்ஷன் குயின். 1935ம் ஆண்டு வெளிவந்த இந்திப் படமான Hunterwaliயில் FEARLESS நாடியாதான் பிரதான கதாபாத்திரம். அந்த படத்தில் கையில் சவுக்குடன் FEARLESS நாடியா போட்ட சண்டைக் காட்சிகளும், குதிரையேற்றத்தில் அவர் செய்த சாகசங்களும், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின. ஆனாலும் அந்த பாதையில் பயணிக்க அரிதாகவே கதாநாயகிகள் முன்வந்தனர். இதனால் திரையுலகில் ஹீரோக்களின் ஆதிக்கம் தொடர்ந்தது.
தமிழ் சினிமாவில் ஹீரோக்களை மையப்படுத்தியே கதைக்களங்கள் உருவாக்கப்பட்டுவந்த நிலையில் பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தும் படங்களை துணிச்சலாக உருவாக்கி அதில் வெற்றியும் கண்டனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கே.பாலச்சந்தர், விசு உள்ளிட்ட இயக்குனர்கள். சாரதா, கற்பகம், சித்தி என படங்களின் பெயரிலேயே பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். தனது படங்களில் பெண் சுதந்திரம் பற்றி அதிகம் பேசிய கே.பாலச்சந்தர், பெண்களை மையப்படுத்தும் படங்கள் தமிழ் சினிமாவில் அதிகரிப்பதற்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தார். அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், நிழல் நிஜமாகிறது, சிந்து பைரவி, அக்னி சாட்சி, புதுப்புது அர்த்தங்கள், ஒரு வீடு இரு வாசல், கல்கி, என சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்கள் மீது சுமத்தப்படும் பாரங்கள், பெண்களின் உளவியல் என மகளிரை மையப்படுத்தி கே.பாலச்சந்தர் எடுத்த படங்கள் அவரின் திரையுலக வாழ்க்கையில் மைல் கற்களாக அமைந்தன. கதைக்களங்கள் ஹீரோக்களை சுற்றி ஒரே மாதிரியாக சென்று கொண்டிருந்த நேரத்தில், பெண்களை மையப்படுத்தும் புதிய கதைக் களங்களை அடையாளம் காட்டினார் கே.பாலச்சந்தர். இயக்குனர் இமயம் பாரதி ராஜாவும், தம் பங்கிற்கு புதுமைப் பெண், கருத்தம்மா என பெண்ணியம் பேசும் படங்களை இயக்கி கோலிவுட்டில் கதாநாயகிகளுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க முயற்சித்தார். அவரது கருத்தம்மா படம் பெண் சிசுக்கொலைக்கு எதிரான சவுக்கடியாக அமைந்தது.
இயக்குநர் விசுவை பொறுத்தவரை அவர் பெண்களை முக்கியத்துவப்படுத்தி எடுக்காத படம் எத்தனை என்பதுதான் எளிதில் அடையாளம் காணக்கூடியதாக இருக்கும். அந்த அளவிற்கு அவரது படங்களில் பெண்ணியம் மேலோங்கி இருக்கும். விசு இயக்கிய முதல் படமான மணல் கயிறு, திருமணத்திற்காக பெண்களுக்கு விதிக்கப்படும் அபத்தமான நிபந்தனைகளை கடுமையாக சாடியது. டௌரி கல்யாணம், சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி, திருமதி ஒரு வெகுமதி என பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பல்வேறு கோணங்களில் அலசியது விசுவின் படங்கள். அவரது படங்களில் பெண் கதாபாத்திரங்களே அதிகம் கைத்தட்டல்களை அள்ளின. சாவித்ரி, பத்மினி, கே.ஆர்.விஜயா, லட்சுமி, ஸ்ரீப்ரியா, லட்சுமி, சரிதா, ராதிகா, சுகாசினி, ரேவதி, ஜோதிகா உள்ளிட்ட நடிகைகள், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் சிறப்பாக நடித்து அந்த படங்களை மக்களிடையே கவனம் பெற வைத்தனர்.
தென்னிந்திய திரையுலகில் ஹீரோக்களைப்போல எங்களாலும் நீண்ட காலம் வலம் வர முடியும் என ஹீரோயின்கள் சிலர் நிரூபித்துள்ளனர். 1985ம் ஆண்டு ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக வெள்ளை மனசு படத்தில் அறிமுகமான ரம்யாகிருஷ்ணன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாயாகியாகவே தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஒரு பெரிய ரவுண்ட் வந்தார். அதன் பிறகும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவிற்கு இவர் திரையுலகில் செல்வாக்கு பெற்றிருப்பதற்கு பாகுபலி படங்களே ஒரு சாட்சி. தொடர்ச்சியாக 37 ஆண்டுகளாக இவரது திரையுலக பயணம் தொடர்ந்து வருகிறது. 1999ம் ஆண்டு ஜோடி படத்தில் இரண்டாவது நாயகியாக தனது திரையுலக பயணத்தை தொடங்கிய திரிஷா, 23 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து வருகிறது. அவர் மீதான கிரேஸ் ரசிகர்களிடையே குறையவில்லை என்பதற்கு சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வனில் அவர் ஏற்றிருந்த குந்தவை கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பே ஒரு சாட்சி.
சினிமாவில் ஹீரோக்களுக்கு போட்டியாக நீண்ட காலம் நடிப்பது மட்டுமல்ல நம்பர் 1ஆகவும் நீடிக்க முடியும் என நிரூபித்துள்ளார் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா. தொடக்கத்தில் அழகு பதுமையாக வந்து செல்லும் கதாநாயகி வேடங்களில்தான் நயன்தாரா நடித்துவந்தார். ஒரு கட்டத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடும் காட்சிகளிலும் அவர் தோன்றினார்.
கதாநாயகர்களின் புகழ்பாடும் படங்களில் தாம் நடித்து வந்தபோதிலும்கூட, கிடைத்த இடங்களில் தனது நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நின்றார். சந்திரமுகி, பில்லா, கஜினி, வல்லவன், யாரடி நீ மோகினி, பாஸ் என்கிற பாஸ்கரன் என தொடர்ந்து வெற்றிப் படங்களில் முகம் காட்டி வந்த நயன்தாராவின் திரையுலக வாழ்க்கையில் 2015ம் ஆண்டு வெளிவந்த மாயா திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நயன்தாராவை மையப்படுத்தி தமிழ் திரையுலகில் ஒரு சுழற்சி ஏற்பட்டது இந்த படத்திலிருந்துதான். அந்த படத்தில் நயன்தாராவே முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நயன்தாராவிற்காகவே அந்த படம் ஓடி கோலிவுட்டில் புதிய டிரெண்ட்டை உருவாக்கியது.
தொடர்ந்து டோரா, அறம், கோலமாவு கோகிலா என நயன்தாராவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்று அவரை லேடி சூப்பர் ஸ்டாராக உயர்த்தின. ஒருபுறம் திகில் படங்கள், இன்னொரு புறம் அறம் போன்ற சமூகத்திற்கு செய்தி சொல்லும் படங்கள், மற்றொருபுறம் இமைக்கா நொடிகள் போன்ற ஆக்ஷன் படங்கள் என நடிப்பில் பல்வேறு பரிணாமங்களை காட்டி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார் நயன்தாரா. அவரை முன்னிலைபடுத்தும் படங்கள் தொடர் வெற்றிகளையும் பெற்று வருகின்றன. நயன்தாராவின் அடுத்த இலக்கு பட்ஜெட்டிலும், பாக்ஸ் ஆபிசிலும், ஆண் சூப்பர் ஸ்டார்களின் வர்த்தக எல்லைகளுக்கு இணையான முக்கியத்துவத்தை பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களும் பெற வேண்டும் என்பதுதான். அந்த ஆசை நிறைவேறுமா…தற்போது உச்சநட்சத்திரங்களாக உள்ள ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு இணையான வசூலை நயன்தாரா படங்கள் குவிக்குமா?…பொறுத்திருந்து பார்ப்போம்.
-எஸ்.இலட்சுமணன்