அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடத்தி சென்ற பெண்; 8 மணி நேரத்தில் மீட்ட போலீசார் விசாரணை…

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் ஆண்குழந்தையை பெண் ஒருவர் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த சுந்தரின் மனைவி மாற்றுத்திறனாளி சூரியகலாவிற்கு, கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில்…

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் ஆண்குழந்தையை பெண் ஒருவர் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த சுந்தரின் மனைவி மாற்றுத்திறனாளி சூரியகலாவிற்கு, கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளதால், கருத்தடை சிகிச்சை செய்வதற்காக வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு இருந்த பெண் ஒருவர் அளித்த உணவை சாப்பிட்ட பிறகு மயக்கமடைந்துள்ளார்.

மயக்கம் தெளிந்து பார்த்தபோது, குழந்தை காணாமல் போனது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மருத்துவமனையிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் பெண் ஒருவர் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. கடத்தி சென்ற பெண்ணின் பெயர் பத்மா என்பதும், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து வேலூர் மாவட்ட காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது குழந்தையை கடத்திச் சென்ற பெண் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பிடிபட்டுள்ளார். அவரிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்ட நிலையில், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பத்மா என்ற பெண்ணை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை கடத்தப்பட்ட சுமார் 8 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.