மதுரை வலையங்குளத்தில் அதிமுக மாநாடு இன்று நடைபெறும் நிலையில், அதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் மாநாடு
அதிமுக 50 ஆண்டுகளை நிறைவு செய்து 51 வது ஆண்டில் பயணிக்கும் வேளையில் மாநாடு நடத்தப்படுகின்றது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அதிமுக மாநாடு நடைபெறுகிறது
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகம் முழுதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் அதிமுக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். அதிமுகவின் இருபெரும் தலைவர்களாக திகழ்ந்த எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உருவம் தாங்கி கோட்டை போன்ற பிரமாண்ட நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.60 ஏக்கர் பரப்பளவில் அதிமுக மாநாடு திடல் அமைக்கப்பட்டுள்ளது
மாநாட்டு திடலின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள 51 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் அதிமுக கொடியினை எடப்பாடி கே.பழனிச்சாமி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கொடியினை ஏற்றும் போது 10 நிமிடங்கள் ஹெலிகாப்டரிலிருந்து 600 கிலோ மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அதே போல மாலையும் ஹெலிகாப்டரிலிருந்து 600 கிலோ மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக அம்மா பேரவையின் சார்பில் 3,000 அதிமுக தொண்டர்கள் சீருடை அணிந்து அணிவகுப்பு நடத்துகின்றனர்.
அதிமுகவின் 51 ஆண்டுகள் வரலாறு, அதிமுகவின் ஆட்சி காலக்கட்டத்தில் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் கொண்ட கண்காட்சியை எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைக்கிறார். மாலையில் எடப்பாடி கே.பழனிச்சாமி சிறப்புரை ஆற்றுகிறார்.
மாநாட்டில் 10 க்கும் மேற்பட்ட மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அம்மா உனவகம், அம்மா மினி கிளினிக், பசுமை வீடுகள் திட்டம் போன்ற அதிமுகவின் திட்டங்களின் மாதிரிகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது
தேவா இசைக்கச்சேரி, மதுரை முத்துவின் நகைச்சுவை பட்டிமன்றம், செந்தில் – ராஜலெட்சுமியின் பல்சுவை கச்சேரி என கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாநாட்டில் பங்கேற்க உள்ள அதிமுக தொண்டர்கள், மக்களுக்காக 1 இலட்சத்து 25 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன
மாநாட்டு மேடையில் பிரமாண்டமான டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது.மாநாடு நிகழ்ச்சிகளை காண 50 க்கும் மேற்பட்ட எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன
தொண்டர்கள் நான்கு திசைகளிலும் இருந்து மாநாட்டு பந்தலுக்கு வருவதற்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் 300 உணவு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு காலை, மாலை, இரவு என 3 வேளை உணவுகள் வழங்கப்படுகின்றது. காலை, மாலையில் சிற்றுண்டியாகவும், மதியம் கலவை சாதமாகவும் உணவுகள் வழங்கப்படுகின்றது.
தொண்டர்கள் ஒய்வு எடுக்க ஆங்காங்கே நிழற்ப்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. 300 ஏக்கர் பரப்பளவில் 15 வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 300 மில்லி லிட்டர் கொண்ட 10 இலட்சம் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்ட உள்ளன. 150 க்கும் மேற்பட்ட மொபைல் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன
வலையங்குளம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 1000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.