பிரசவத்திற்கு பயந்து கருவை கலைக்க நாட்டு மருந்தை சாப்பிட்ட ஒடிசாவை சேர்ந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், பாரதி நகரில் ஒடிசாவை சேர்ந்த பிரதாப் உள்கா அவரது மனைவி குமாரியுடன் வசித்து வருகிறார். தற்போது, குமாரி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். முன்னதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இவர்களது உறவினர் ஒருவர் பிரசவத்தின்போது உயிரிழந்து விட்டதாக வந்த தகவலை அடுத்து இருவரும் ஒடிசாவுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற குமாரிக்கு தானும் இதுபோல பிரசவத்தின்போது உயிரிழந்துவிடுவோமோ என்ற அச்சம் தொற்றிக்கொண்டது. இதையடுத்து, அவரது கணவருக்கு தெரியாமல் தன்னுடைய தோழி ஒருவரின் உதவியுடன் கருக்கலைப்புக்கு நாட்டு மருந்தை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்பின் அவருக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத குமாரி, தனது அன்றாட பணிகளை தொடர்ந்து செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் அவருக்கு உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தான் கருகலைக்க நாட்டு மருந்து வாங்கி சாப்பிட்டதை தனது கணவர் பிரதாப்பிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சில மாத்திரைகளை பரிந்துரைத்துள்ளனர். அதை எடுத்து கொண்டபின், குமாரியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், அடுத்த சில நாட்களிலேயே உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து பிரதாப், உடனடியாக மனைவியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கருக்கலைப்பு மருந்தை உட்கொண்டதால் 3 மாதத்திலேயே குழந்தை இறந்துவிட்டதாகவும், ஆனால், குழந்தை வெளியேறாமல் கருப்பையில் தங்கியதால், அது சீழ் பிடித்து மிகவும் பாதிப்படைந்துள்ளது எனக்கூறி உடனடியாக குமாரிக்கு அறுவை சிகிச்சை செய்து கருப்பையை அகற்றி உள்ளனர். இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து குமாரியின் சகோதரி அளித்த புகாரின்பேரில் கணவர் பிரதாப்பிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.