இந்திய வம்சாவளியை சேர்ந்த இல்டா எஸ்டீவ்ஸ் என்பவர் இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவையில் (NHS) சுகாதார உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
61 வயதான இவர் சக ஊழியரான சார்லஸ் ஒப்போங் என்பவர் மீது துன்புறுத்தல் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில் கானா நாட்டை வம்சாவழியாக கொண்ட சார்லஸ் ஒப்போங், தன்னை ஆண்டி (aunty) என்று அழைத்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த ஆண்டு முழுவதும் நடைபெற்றது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட சார்லஸ் ஒப்போங் குற்றச்சாட்டை ஒப்புகொண்ட போதிலும், கானா கலாச்சாரத்தில் ‘ஆண்டி’ என்பது வயதானவர்களை மரியாதையுடன் அழைக்கும் ஒரு சொல் என்று நீதிமன்றத்தில் குறிப்பட்டிருந்தார்.
அதே நேரம் சார்லஸ் ஒப்போங்கிடம் தன்னை பெயரை கூறி அழைக்குமாறு கேட்டுக்கொண்ட போதிலும், அவர் பல சந்தர்ப்பங்களில் ‘ஆண்டி’ என்ற சொல்லைப் பயன்படுத்தியதாக எஸ்டீவ்ஸ் தரப்பில், கூறப்பட்டது. மேலும் சார்லஸ் ஒப்போங் தனது வார்டில் பணிபுரிந்த ஜார்ஜ் என்ற வயதான ஊழியருக்குத் தான் ஒரு “நல்ல பொருத்தமாக இருப்பேன்” என்று கூறியதாகவும் இல்டா எஸ்டீவ்ஸ் தெரிவித்தார்.
வாட்ஃபோர்ட் வேலைவாய்ப்பு தீர்ப்பாயம் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ளது. அதில் கானா கலாச்சாரத்தில் ‘ஆண்டி’ என்பது உண்மையில் ஒரு மரியாதைக்குரிய சொல் என்றாலும் அது வாதியின் விருப்பத்திற்கு மாறாக இருந்ததால், அது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும்.
இதனால் இல்டா எஸ்டீவ்ஸுற்கு ஏற்பட்ட மனக்காயத்திற்காக அவருக்கு மொத்தமாக 1,425.15 பவுண்டுகள் (ரூ.1.8 இலட்சம்) இழப்பீடு வழங்குமாறு மேற்கு லண்டன் NHS அறக்கட்டளைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.







