சமூக வலைதளங்கள் மூலம் 7 ஆண்களை ஏமாற்றி பெண் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணக்குடியை சேர்ந்தவர் பாலகுரு என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் உள்ள மகாதேவபுரத்தை சேர்ந்த ரஜபுநிஷா என்ற பெணுடன் முகநூலில் அறிமுகமாகி நட்பாகியுள்ளார். இவர்களின் முகநூல் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ரஜபுநிஷா மீது அதீத காதல் கொண்ட பாலகுரு இதனை இரு வீட்டாரிடமும் தெரிவித்துள்ளார். இருவரின் காதலையும் ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் மணக்குடியில் உள்ள பொரையான் கோயிலில் முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்திற்கு பின் இருவரும் சேந்தங்குடியில் உள்ள சிவப்பிரியா நகரில் தனியாக வசித்து வந்துள்ளனர். பாலகுரு ஓட்டுநராக பணிபுரிவதால், அடிக்கடி வெளியூர் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். பாலகுரு வீட்டில் இல்லாத நேரத்தில் ரஜபுநிஷா டிக்டாக் மற்றும் முகநூல் மூலம் பல ஆண்களிடம் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஜபுநிஷாவின் நடவடிக்கைகளில் பல மாறுதல்கள் ஏற்பட தொடங்கின. இதனால் சந்தேகமடைந்த பாலகுரு, மனைவி ரஜபுநிஷாவின் தொலைபேசியை எடுத்து ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் அவருக்கு பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தன.

மனைவி ரஜபுநிஷா டிக் டாக் மூலம் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் மொபைலில் குவிந்து இருந்துள்ளன. உடனடியாக ரஜபுநிஷாவின் வேறொரு எண்ணில் தொடர்பு கொண்ட பாலகுரு, இது குறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரஜபுநிஷா கூறிய வார்த்தைகளை கேட்ட பாலகுரு மேலும் திகைத்து போனார்.
“நான் உன்னைமட்டும் திருமணம் செய்துகொள்ளவில்லை, பணத்திற்காக பல ஆண்களையும் திருமணம் செய்துள்ளேன்” எனக் கூறிய அவர், “சில தினங்களுக்கு முன்பு கூட திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும், மேலும், எங்கள் வாழ்க்கையில் தலையீட்டால் பார்த்திபனுடன் சேர்ந்து உன்னை கொலை செய்து விடுவேன்” எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து செய்வதறியாது திகைத்துப்போன பாலகுரு, தன்னுடைய வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது 70,000 ரூபாய் பணத்தையும் ஒரு பவுன் தங்கச் சங்கிலியையும் திருடிக்கொண்டு ரஜபுநிஷா வீட்டை விட்டு சென்றுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து ரஜபுநிஷாவின் அம்மாவிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாலகுரு பேசியுள்ளார். அப்போது “எனது மகள் என்னுடைய ஆலோசனைப்படியே 7 பேரையும் திருமணம் செய்துள்ளதாக” கூறியுள்ளார் ரஜபுநிஷாவின் தாயார். மேலும், “நீ இந்த விஷயங்களில் இருந்து ஒதுங்கிக்கொள், இல்லை எனில் உன்னை கொலை செய்து விடுவோம்” எனவும் பால குருவை மிரட்டியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ந்து போன பாலகுரு, தன்னிடம் நடித்து பொய்யாக திருமணம் செய்து ஏமாற்றிய ரஜபுநிஷா மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தன் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளரிடம் மனு கொடுத்துள்ளார். மேலும் தன்னைப் போன்று மேலும் பல ஆண்கள் ஏமாற்றப்படுவதற்குள் ரஜபுநிஷாவை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பாலகுருவின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







