சாலையை கடக்க முயன்ற பெண் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதால், அந்த பெண் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வனஜா (வயது-55). இவர் தாம்பரம் அடுத்த முடிச்சூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக முடிச்சூர் பகுதியில் உள்ள சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் வனஜா மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் 10 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார்.
பின்னர் பலத்த காயமடைந்த வனஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே வனஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து, வனஜாவின் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே வனஜா சாலையை கடக்கும் போது இருசக்கர வாகனம் மோதிய விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பத பதக்க வைத்துள்ளது.
உறவினர் வீட்டுக்கு வந்து நபர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்








