மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் கொரோனா பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் மருத்துவமனைக்கு வெளியே கொரோனா சிகிச்சைக்காக காரில் காத்திருந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து நாள் ஒன்றுக்கு 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது.…

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் மருத்துவமனைக்கு வெளியே கொரோனா சிகிச்சைக்காக காரில் காத்திருந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து நாள் ஒன்றுக்கு 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல், 3 மணி நேரம் வாகனத்திலேயே காத்திருந்து உயிரிழந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் அரங்கேறியுள்ளது.

கிரேட்டர் நொய்டாவில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் 35 வயதான ஜாக்ரிதி குப்தா. கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் மத்திய பிரதேசத்தில் வசித்து வந்த இவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் நொய்டாவில் உள்ள அரசு ஜிம்ஸ் மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறுவதற்காக காரில் சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காததால், மருத்துவமனை வளாகத்தில் காரில் அமர்ந்து படுக்கைக்காக 3 மணி நேரமாகக் காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடியுள்ளார். அங்கிருந்தவர்கள் இதைக்கண்டு மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜக்ரிதி குப்தாவைப் பரிசோதித்தபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் கொரோனா பதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகளில் நொய்டாவும் உள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனை படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் தெரிவித்திருந்தார். உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34, 626 பாதிப்புகளும் 332 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,52,324ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.