தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை சட்டமசோதா திரும்பப் பெறப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து
12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் பல எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது.
அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். இதையடுத்து தொழிலாளர்கள் தினசரி 12 மணி நேரம் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், தொழிற்சங்கங்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சட்டமசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
இதன்பின்னர் தொழிற்சங்கங்களுடன் அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து 12 மணி நேர சட்டமசோதா மீதான செயலாக்கத்தை நிறுத்திவைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். பின்னர் மே தின நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 12 மணி நேர சட்டமசோதாவை தமிழ்நாடு அரசு திரும்பப்பெறுவதாக அறிவித்தார்.
இதையும் படியுங்கள் : டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு..!
அதன்படி, இந்த சட்டமசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டப்பேரவை மூலம் கடிதமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.








