பதவி நீக்கம் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தியை மீண்டும் எம்.பி. ஆக்காதது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
2019- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். தனது உரையின் போது, மோடி பெயர் குறித்து ராகுல் முன் வைத்த ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் இந்த பேச்சு, மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாகக் குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வெள்ளி கிழமை தீர்ப்பளித்தது. அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/mkstalin/status/1688204136662310913?s=20
இந்நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கு காண்பித்த அவசரத்தை, திரும்ப பெறுவதில் ஏன் காட்டவில்லை என வினவியுள்ளார். பதவி நீக்கத்தை திரும்ப பெற்றால் ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வந்துவிடுவார் என்பதால், பாஜக அஞ்சுகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.







