மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டதை ஆதரிப்பவர்கள், அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைப்பவர்கள், ஜெய்பீம் திரைப்படத்தை கொண்டாடுவார்களா என நடிகர் பிரகாஷ் ராஜ் தனது X பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
69-வது தேசிய விருதுகள் கடந்த 24-ஆம் தேதி (24.08.2023) அறிவிக்கப்பட்டன. இதில் 2021-ம் ஆண்டில் சென்சார் செய்யப்பட்டு பிறகு ரிலீஸ் ஆன படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் RRR, புஷ்பா ஆகிய படங்களுக்கு அதிக அளவு விருதுகள் கிடைத்ததால், தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடைசி விவசாயி திரைபடத்துக்கும் இரவின் நிழல் பாடலுக்கு மட்டுமே விருதுகள் கிடைத்துள்ளன.
தமிழில் Non Feature Film பிரிவில் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு தயாரித்து இயக்கிய கருவறை என்ற ஆவணப்படத்திற்கு இசையமைத்ததற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
இதே போன்று சிறந்த கல்வி திரைப்படத்திற்கான தேசிய விருது சிற்பிகளின் சிற்பங்கள் என்ற திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. இந்த திரைப்படத்தை எடிட்டர் பீ.லெனின் இயக்கியிருந்தார்.
இவற்றை தவிர தமிழ் சினிமாவில் வேறு எந்த திரைப்படமும் தேசிய விருதுக்கு தேர்வாகவில்லை. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே அமைந்தது. குறிப்பாக சூர்யாவின் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்காதது தமிழ் திரையுலகினர் மத்தியிலும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதோடு, தேசிய விருதுகள் வழங்கப்படுவதில் அரசியல் தலையீடு உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதே போல் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டது கடும் விமர்சனத்தை கிளப்பியது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது என விமர்சனம் செய்திருந்தார்.அந்த வகையில், ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காததால், நடிகர் நானி இதயம் நொறுங்கும் Emoji -யை பதிவிட்டிருந்தார்.
ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? என ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கேள்வி எழுப்பியிருந்தார். அவர் தனது X தளத்தில், இந்த வருடத்தில் வழங்கப்பட்டுள்ள தேசிய விருதுகள் திரைத் துறையில் ஒருவனாக எனக்கு மகிழ்ச்சியை தந்தது. ஆனால் ஜெய்பீம் படத்திற்கு விருது வழங்கப்படாததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா..? அல்லது “இந்தியாவின்” குரலை கண்டு அவர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளதா..? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டதை ஆதரிப்பவர்கள், அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைப்பவர்கள், ஜெய்பீம் திரைப்படத்தை கொண்டாடுவார்களா என நடிகர் பிரகாஷ் ராஜ் தனது X பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறு ஜெய்பீம் திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்படாதது குறித்து பலரும் தங்களது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.







