ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அவரது பெயரை கெடுத்துவிடக் கூடாது என்று பயந்து கொண்டேதான் நடித்தேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.
இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் வடிவேலு, கங்கனா ரணாவத் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவிமரியா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும், இப்படம் விநாயகர் சதுர்த்தியை(செப்.15) அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த படத்தில் மொத்தம் 10 பாடல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். இதில் படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் பேசியதாவது:
“இந்தப் படத்தின் கதையை இயக்குநர் வாசு என்னிடம் சொன்னபோதே எனக்கு பிரம்மாண்டம்தான் தெரிந்தது. இந்த படம் தொடங்கி முடியும் வரை ரஜினி சாரின் ஆசிர்வாதம் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அவர் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அவரது பெயரை கெடுத்துவிடக் கூடாது என்று பயந்து கொண்டேதான் நடித்தேன்” இவ்வாறு அவர் கூறினார்.







